'ஸ்பைடர் மேனை' உருவாக்கிய 'காமிக்ஸ்' எழுத்தாளர் காலமானார்

தினமலர்  தினமலர்
ஸ்பைடர் மேனை உருவாக்கிய காமிக்ஸ் எழுத்தாளர் காலமானார்

லாஸ்ஏஞ்சலஸ்: 'காமிக்ஸ்' புத்தகங்களில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை, எல்லாராலும் விரும்பப்படும், 'ஸ்பைடர்மேன்' கதாபாத்திரத்தை உருவாக்கி சாதனை படைத்த, ஸ்டான் லீ, 95, நேற்று காலமானார்.அமெரிக்காவில், 1922, டிச., 28ல் பிறந்த, ஸ்டான்லி மார்டின் லீபர், சிறுவர்களுக்கான படக்கதைகளை வழங்கும், 'காமிக்ஸ்' புத்தகங்களுக்கான கதாபாத்திரங்களை உருவாக்குவதில் வல்லவர். இவர், ஸ்டான் லீ என, அழைக்கப்பட்டார்.ஜாக் கிர்பி, ஸ்டீவ் டிட்கோ உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்களுடன் சேர்ந்து, காமிக்ஸ் புத்தகங்களுக்கான புகழ்பெற்ற கதாபாத்திரங்களை, ஸ்டான் லீ உருவாக்கினார்.ஸ்டான் லீ உருவாக்கிய,'ஸ்பைடர் மேன்' மற்றும் 'அயன் மேன்' கதாபாத்திரங்கள் அடங்கிய காமிக்ஸ் புத்தகங்கள், உலகளவில் பெரும் புகழ் பெற்றவை. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துடன் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள், வசூலை வாரிக் குவித்தன.ஓவியர் ஜாக் கிர்பியுடன் சேர்ந்து, ஸ்டான் லீ உருவாக்கிய, 'ஹல்க், தோர், அயன் மேன், எக்ஸ் - மென்' போன்ற கதாபாத்திரங்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளால் பெரிதும் விரும்பப்பட்டன.தன், 17ம் வயதில், காமிக்ஸ் புத்தக எழுத்தாளராக களமிறங்கிய ஸ்டான்லி, 1941ல், 'கேப்டன் அமெரிக்கா ஸ்டோரி' என்ற புத்தகத்தை எழுதினார். ஸ்டான் லீ, உதவியாளராக சேர்ந்த, 'டைம்லி காமிக்ஸ்' நிறுவனம், பின்னாளில், மார்வல் என்ற பிரமாண்ட நிறுவனமாக உருவெடுத்தது.ஸ்டான் லீ உருவாக்கிய பல கதாபாத்திரங்கள், மார்வல் நிறுவனத்துக்கு, பல்லாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து தந்தன. 1972ல், மார்வல் நிறுவனத்தில் இருந்து ஸ்டான் லீ வெளியேறினார். பல ஹாலிவுட் திரைப்படங்களில், சிறப்பு தோற்றத்தில், இவர் நடித்துள்ளார்.காமிக்ஸ் கதாபாத்திரங்களால் உலகளவில் புகழ் பெற்று விளங்கிய ஸ்டான் லீ, சமீப காலமாக, வயது முதிர்வால் தளர்வடைந்திருந்தார். இந்நிலையில், லாஸ்ஏஞ்சலஸ் நகரில், நேற்று முன்தினம், அவர் காலமானார். அவரது மறைவுக்கு, ஹாலிவுட் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.

மூலக்கதை