அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பிய செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பிய செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிஎன்என் செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. செனட் சபையை குடியரசு கட்சி தக்க வைத்துக் கொண்டாலும் பிரதிநிதி சபை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. இதனால் தன்னிச்சையாக எந்த ஒரு மசோதாவையும் ட்ரம்பால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், சுமார் ஒன்றரை மணி நேரம் வரை பேசினார். அப்போது ஒரு சில செய்தியாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கு குடியேற்ற விவகாரத்தில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை தான் காரணமா? அல்லது 2016ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணையில் ஏற்பட்ட சுணக்கமா? இல்லை ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பரப்புரைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனால் நிதானத்தை இழந்த அதிபர் ட்ரம்ப் சிஎன்என் தொலைக்காட்சி தான் ரஷ்யாவுக்கு ஆதரவாக பணியாற்றுவதாக குற்றம் சாட்டினார். மேலும் அந்த தொலைக்காட்சி நிருபர் ஜிம் அகோஸ்டா மோசமானவர் என்றும் பகிரங்கமாக திட்டித் தீர்த்தார். இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அகோஸ்டாவின் ஊடக அடையாள அனுமதியையும் வெள்ளை மாளிகை ரத்து செய்துள்ளது.

மூலக்கதை