ராஜபக்சே அமைச்சரவை நாளை பதவியேற்பு இலங்கை முழுவதும் ராணுவம் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜபக்சே அமைச்சரவை நாளை பதவியேற்பு இலங்கை முழுவதும் ராணுவம் குவிப்பு

* அரசு பங்களாவில் இருந்து ரணிலை வெளியேற்ற முயற்சி
* நாடு முழுவதும் வன்முறை அபாயம்

ெகாழும்பு: இலங்கை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்ட நிலையில், பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவின் புதிய அமைச்சரவை நாளை பொறுப்பேற்கிறது. அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேற மறுப்பதால், வன்முறையை தடுக்கும் நோக்கில் முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் விடுத லை கூட்டணி அமைக்கப்பட்டு, இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகவும் பதவி வகித்து வந்தனர். சர்வதேச அரசியல், உள்நாட்டு பிரச்னை போன்ற காரணங்களால் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி திடீரென உடைந்தது.

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் பதவி பறிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சே, திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது, சர்வதேச அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், ‘ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது.

நான்  பிரதமராக தொடர்கிறேன்’ என்று ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்த நிலையில், வரும் நவம்பர் 5ம் தேதி கூடயிருந்த நாடாளுமன்ற கூட்டத்தை, வரும் 16ம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அதிபர் சிறிசேனா. அதனால், அந்த நாட்டின் பிரதமர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அரசியல் எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் தற்போது ஏன் கைகோர்த்து உள்ளனர்.

இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை துவக்கி, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றார்.

 இவரின் செல்வாக்கு அதிகரித்து வருவது, ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்குள் விரிசல் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் எம்பி லக்ஷ்மன யாபா அபயவர்த்தன கூறுகையில், ‘‘புதிய அமைச்சரவை திங்களன்று நியமிக்கப்படும். அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேறவில்லை என்றால், அவர் மீது அரசு சொத்துகளை  முறைகேடாக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, இரு தரப்பினரும் எம்பிக்களை விலை பேசுவதற்கு வசதியாக, அடுத்த இருவாரங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கடந்த 2015 ஜனவரி அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, மறுநாள் கொழும்பு  சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன், நாட்டு  மக்களுக்கு உரையாற்றிய சிறிசேனா, ‘‘இனிமேல் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை’’ என்று அறிவித்தார்.



ஜனாதிபதி ஆட்சி முறையை  ஒழித்துவிடவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த வைராக்கியமாகவே அவரது அந்தப்  பிரகடனத்தை பலரும் அர்த்தப்படுத்திக் கொண்டனர். ஆனால், இன்று ஜனாதிபதி  ஆட்சி முறை மாற்றப்படவே கூடாது என்று வாதிடுகின்ற கட்சியாக சிறிசேனா  செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில்  முரண்பாடுகள் அதிகரித்துவிட்ட பின்னர், இரு கட்சிகளும் இணைந்து செயல்படாத  நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில், ராஜபக்சேவின் புதிய கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதுதான்.   இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் கொள்கை,  அணுகுமுறைதான் என்று குற்றஞ்சாட்டிய சிறிசேனா, அவரை பதவி நீக்கவும்  முயற்சித்தார்.

ஆனால், அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் விளைவாக  அவ்வாறு பதவி நீக்குவது சாத்தியமில்லை என்று முடிவானதால், நாடாளுமன்றம்  மூலம் அவரை அகற்ற, பிரதமராக ராஜபக்சேவை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ‘‘கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பின்னர், அதிகாரபூர்வ இல்லத்தை தாம் திரும்ப ஒப்படைத்தது போல, ரணிலும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்’’ என்று புதிதாக பிரதமர் பதவியேற்றுள்ள ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

தற்போது, அலரி மாளிகையில் இருக்கும் ரணில், தானே பிரதமர் எனக்கூறி மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வருவதால், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே பரபரப்பாகவே காணப்படுகிறது. வாகனங்கள் தொடர்ந்து வந்து செல்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் குழுமி வருகின்றனர். ரணிலை அலரி மாளிகையில் இருந்து வெளியேற்ற ராஜபக்சே தரப்பு குறியாக இருக்கிறது.

அதனால், அலரி மாளிகை, ரணில் விக்ரமசிங்கேவின் வீடு ஆகியவற்றில் போலீஸ் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வன்முறையை தடுக்கும் பொருட்டு, ராஜபக்சேவின் வீட்டிற்கும், கொழும்பிலுள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகை, செயலகம், அமைச்சரின் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் இலங்கை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ரணிலுக்கு வெற்றிவாய்ப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 225.

ஆனால், சிறிசேனா, ராஜபக்சே மற்றும் அவர்களின் ஆதரவு கட்சிகளுக்கு மொத்தம் 95 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆனால், ரணில் விக்ரமசிங்கே கட்சிக்கு 106 எம்பிக்கள் உள்ளனர்.

இன்னும் 7 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அவரால் பெரும்பான்மை இலக்கான 113 எம்பிக்களின் ஆதரவை எளிதில் பெற்றுவிட முடியும். இதற்கிடையே 16 எம்பிக்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு விக்ரமசிங்கேவுக்கு உள்ளது.

மேலும், 6 எம்பிக்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ரணில்  விக்கிரமசிங்கேக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன்  தெரிவித்தார்.

அதேபோல், 7 எம்பிக்கள் வைத்துள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரவூப் ஹக்கீமும், ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக  அறிவித்தார்.

ஆனால், 2 எம்பிக்களை வைத்துள்ள இலங்கை தொழிலாளர் கட்சித்  தலைவர் ஆறுமுகம் தொண்டமான், தங்கள் கட்சி  ராஜபக்சேவை ஆதரிப்பதாக அறிவித்தார். எனவே நாடாளுமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெறும் பட்சத்தில் ரணில் விக்ரமசிங்கே எளிதாக வெற்றி பெற்றுவிட வாய்ப்புள்ளது.

கப்பல் தளம் விவகாரம்?  
இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த எம்பி நிமல் சிரிபால  டி. சில்வா கூறுகையில், ‘‘கொழும்பு மேற்கு கப்பல் தளத்தை இந்தியாவுக்குத்  தருவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது தான், பிரதமர் மாற்றத்துக்கான  தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அதிபர் சிறிசேனாவை கொல்வதற்கான  முயற்சி குறித்து உரிய விசாரணையை பிரதமர் ரணில் முன்ெனடுக்கவில்லை. அதற்கான,  அக்கறையை ரணில் விக்ரமசிங்கே மேற்கொள்ளவில்லை’’ என்றார்.



இதற்கிடையே, ராஜபக்சே பிரதமராக பதவியேற்றதற்கு, சீன தூதரகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக கவனிப்பதாக கூறினாலும், அங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கையின் பின்னணியில் சர்வதேச வலைகள் பின்னப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.



.

மூலக்கதை