ரணில்-ராஜபக்சே... பிரதமர் யார்? இலங்கையில் அரசியல் நெருக்கடி: நவ. 5ம் தேதி பலத்தை நிரூபிக்க கெடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரணில்ராஜபக்சே... பிரதமர் யார்? இலங்கையில் அரசியல் நெருக்கடி: நவ. 5ம் தேதி பலத்தை நிரூபிக்க கெடு

கொழும்பு: இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயின் பதவி பறிக்கப்பட்டு, புதியதாக ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு செல்லாது என்று ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தால், அந்நாட்டில் அரசியலமைப்பு ெநருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில், இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகவும் இருந்து வந்தனர்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி திடீரென உடைந்ததால், அந்த நாட்டில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து.



இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் பதவிப்பிரமாணம் நடந்தது.

‘ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நான் பிரதமராக தொடர்கிறேன்’ என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில், அவர் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளார். இதனால், அந்நாட்டில் குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது.

கடந்த சில ஆண்டுக்கு முன், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட ராஜபக்சே, லங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்தி, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அந்நாட்டில் அரசியல் அமைப்பு சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுனர் அசோக்பரன், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கையின், 19வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46 (2)ன்படி, அமைச்சரவை தொடரும் நிலையில், இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும்.

ஒன்று பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 43 (3)ன்படி, அமைச்சர்களின் எண்ணிக்கையையும், இலாகாக்களையும் ஜனாதிபதியால் மாற்ற முடியும்.

அப்படி மாற்றும்போது, அமைச்சரவை தொடர்ந்து செயல்படுவது பாதிக்கப்படாது.

மேற்கண்ட இரண்டு முறைகளை தவிர, மற்ற எந்தக் காரணத்தினாலும் ஜனாதிபதியால் பிரதமரை மாற்ற முடியாது.

சட்டப்பிரிவின், 42 (4)ன்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற உறுப்பினர் என்று தான் நம்பும் யாரையும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில்தான் ராஜபக்சேவை பிரதமராக நியமித்திருக்க முடியும்.

பிரதமரை நீக்க நெறிமுறைகள் உள்ள நிலையில், பிரதமர் ஒருவரை நீக்கிவிட்டு, இன்னொரு பிரதமரை எப்படி நியமிக்க முடியும்?. எனவே, இது முழுமையான அரசியல் சட்டக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில், நீதிமன்றம் முக்கிப் பங்காற்ற வேண்டும். தற்போது, இலங்கையின் பிரதமர் யார், எவரிடம் அதிகாரம் இருக்கிறது என்பதே குழப்பமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அவமதிப்பு: வரும் நவம்பர் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு கூட்டம் நடக்கவுள்ளது.

அன்றைய தினம், பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். அதனால், ராஜபக்சே தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபக்சே தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறுகையில், ‘‘புதிய பிரதமரும், ஜனாதிபதியும் பேச்சு நடத்தி அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்பார்த்துள்ளோம்.

எனினும், இறுதித் தீர்மானத்தை பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் பேச்சு நடத்தி அறிவிப்பார்கள்’’ என்றார்.

இதுகுறித்து, சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனரத்ன கூறுகையில், ‘‘ராஜபக்சே மற்றும் ரணில் ஆகியோரின் டுவிட்டர் தளங்களில், தங்களை பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பிரதமர் இருக்கும்போது மற்றொருவரை நியமித்தது அரசியல் சட்டத்துக்கு முரணானது. காவல்துறை மற்றும் முப்படைகளின் அதிகாரங்களும் ரணிலிடமே உள்ளது’’ என்றார்.   தற்போது வரை, இரு தரப்பினரும் தாங்கள்தான் பிரதமர் என்று கூறி வருவதால், இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரணில் விக்ரம சிங்கே வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி பிரதமராக நியமிக்கப்பட்டேன். அந்த பணி மற்றும் அலுவலில் தொடர்கிறேன்.

அரசியல் அமைப்பு சட்டப்படி, 42 (4)ன்படி, நாடாளுமன்ற அவமதிப்பு நடந்துள்ளது’ என, தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை