கஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்

தினமலர்  தினமலர்
கஷோகி மரண விவகாரம்: சவுதி விளக்கத்தை ஏற்றார் டிரம்ப்

வாஷிங்டன், :''பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணத்தில், சவுதி அரேபிய அரசு அளித்த விளக்கத்தை நம்பு கிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.வளைகுடா நாடான, சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர், பத்திரிகையாளர், ஜமால் கஷோகி. இவர், அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், சவுதி அரசை விமர்சித்தும், அந்நாட்டு இளவரசர் முகமது-பின்-சல்மானை கண்டித்தும், பல கட்டுரைகள் எழுதி உள்ளார்.மத்திய கிழக்கு நாடான, துருக்கியின், இஸ்தான்புல் நகரிலுள்ள, சவுதி துாதரக அலுவலகத்துக்கு, சமீபத்தில், ஜமால் கஷோகி சென்றார்; பின், அவரை காணவில்லை.இதையடுத்து, சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள், ஜமால் கஷோகியை கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை அழித்து விட்டதாக, துருக்கி குற்றஞ்சாட்டியது. அதற்கான ஆதாரத்தையும், துருக்கி வெளியிட்டது. இந்த விவகாரம், சர்வதேச அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் இந்த குற்றச்சாட்டை, சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'இந்த சம்பவத்தில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விவகாரத்தில், இரு வாரங்களாக மர்மம் நீடித்து வந்த நிலையில், பத்திரிகையாளர், ஜமால் கஷோகி கொல்லப்பட்டதை, சவுதி அரேபிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.இது குறித்து, சவுதி அரேபிய அரசு அதிகாரிகள் கூறியதாவது:சவுதி அரேபிய துாதரகத்தில், பத்திரிகையாளர், ஜமால் கஷோகி சந்திக்கச் சென்ற நபருடன், அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில், ஜமால் இறந்திருக்கலாம் என்பது, முதல் கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த, 18 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சவுதி அரேபியா உளவுப் பிரிவு துணைத் தலைவர், அகமது அல்- அன்சாரி, அரசின் ஊடக ஆலோசகர், சவுத் அல்- கதானி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்நிலையில் நேற்று, இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியதாவது:பத்திரிகையாளர், ஜமால் கஷோகி மரணம் தொடர்பாக, சவுதி அரேபிய அரசு அளித்த விளக்கத்தை நம்புகிறேன். எனினும், இது தொடர்பாக, அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தில், சவுதி அரேபிய அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பிலேயே உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.எனினும், ஜமால் கஷோகி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அமெரிக்க, எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு, வெள்ளை மாளிகையும், ஐக்கிய நாடுகள் சபையும் இரங்கல் தெரிவித்துள்ளன.

மூலக்கதை