அமெரிக்காவில் நிரவ்மோடி செய்த ‘கோல்மால்’ 1.47 கோடிக்கு போலி வைர மோதிரம் விற்பனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் நிரவ்மோடி செய்த ‘கோல்மால்’ 1.47 கோடிக்கு போலி வைர மோதிரம் விற்பனை

கலிபோர்னியா : அமெரிக்காவில், போலி மோதிரத்தை ரூ. 1. 47 கோடிக்கு விற்ற நிரவ் மோடியால், காதலியை பிரிந்து பரிதவிக்கும் காதலன் தற்போது நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு நடையாய் நடந்து வருகிறார்.

இந்தியாவில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள நிரவ் மோடி மீது தற்போது மற்றொரு மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த பால் அல்போன்ஸ் என்பவருக்கு, நிரவ் மோடியுடன் நட்பு உருவானது.

இருப்பினும் நிரவ்மோடி நல்ல மனிதர் தான் என்றும், மோசடி வழக்கில் சிக்கியவர்  என்று ஒரு விவரம் அறியாத அப்பாவியாக அல்போன்ஸ் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் இருந்த நிரவ் மோடியை தொடர்பு கொண்டு, தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு ஸ்பெஷல் மோதிரம் ஒன்று செய்து தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்காக, 1,20,000 டாலர் மதிப்பில் 3. 2 கேரட் உள்ள மோதிரத்தை தேர்வு செய்துள்ளார். பின்னர், பால் அல்போன்ஸின் காதலி கேட்டுக் கொண்டதற்காக 80,000 டாலர் மதிப்புள்ள மற்றொரு மோதிரத்தையும் வேண்டுமென்று கேட்டு வாங்கியுள்ளார்.

அந்த மோதிரங்களை தனது காதலியிடம் அளித்து, இருவரும் திருமணக் கனவுகளில் மிதக்க தொடங்கியுள்ளனர்.

அதேநேரம், இரு மோதிரமும் இந்திய ரூபாயின்படி 1 கோடியே 47 லட்சம் என்பதால், அதனை இன்சுரன்ஸ் செய்ய முடிவெடுத்து நிரவ்மோடிக்கு ஒரு இமெயில் அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த நிரவ்மோடி, சான்றிதழ்களை அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், நாட்கள் கடந்து செல்ல சான்றிதழ்கள் வந்து சேரவில்லை. எனவே அல்போன்ஸ் காதலி, அருகில் உள்ள இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அந்த மோதிரங்களை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு மோதிரங்களை சோதனை செய்ததில், மோதிரங்கள் போலியானது என்று தெரியவந்தது. இந்த உண்மையை அல்போன்ஸிடம் காதலி கூற, இதனை நம்ப முடியாமல் அல்போன்ஸ் தவித்துள்ளார்.

மேலும், தான் 2 லட்சம் டாலர்கள் அந்த மோதிரத்திற்கு செலவழித்ததாகவும், அது எப்படி போலியாக இருக்கும் என்றும் பல கேள்விகள் எழுப்பினார். தீவிர விசாரணைக்கு பின், நிரவ் மோடி தன்னை ஏமாற்றிவிட்டதாக அல்போன்ஸ் உணர்ந்தார்.

இருந்தும், தனது காதலன் தம்மை ஏமாற்றிவிட்டதாக எண்ணி அவரை விட்டு பிரிந்து காதலி சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த அல்போன்ஸ், நிரவ் மோடிக்கு மீண்டும் ஒரு இமெயில் எழுதினார்.

அதில், ‘நீ என் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறாய் என்று தெரிகிறதா? உன்னால் நான் என் வருங்கால மனைவியை இழந்துவிட்டேன். என் வாழ்க்கையையே சீரழித்துவிட்டாய்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அதன்பின் எவ்வித பதிலும் நிரவ் மோடியிடம் இருந்து வரவில்லை. விரக்தியடைந்த அல்போன்ஸ், அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா உச்சநீதிமன்றத்தில் நிரவ்மோடிக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில், தன் வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சியை சீர்குலைத்த காரணத்திற்காக, 2 லட்சம் டாலர் உட்பட 4. 2 மில்லியன் டாலர்களை இழப்பீடாக நிரவ் மோடி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.

இதுகுறித்து, அல்போன்ஸ் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘இந்த பணம் நிச்சயம் எனக்கு கிடைக்காது என்று தெரியும். ஏனெனில் எனக்கு முன்னால் நிரவ் மோடியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொடுக்காமல் எனக்கு வராது. இருப்பினும் நான் இந்த வழக்கு போட்டதற்கு காரணம், என்னை போல் யாரும் அவரை நம்பி ஏமாறக் கூடாது.

நான் என் வாழ்க்கையை தொலைத்தது போல யாரும் தொலைத்துவிடக் கூடாது’ என்றார்.

.

மூலக்கதை