ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தான போது தாம் பதவியில் இல்லை : பிரஞ்சு அதிபர் மழுப்பல்

தினகரன்  தினகரன்
ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தான போது தாம் பதவியில் இல்லை : பிரஞ்சு அதிபர் மழுப்பல்

பாரீஸ் : நாட்டையே உலுக்கும் ரபேல் ஊழல் குறித்து பிரஞ்சு அதிபர் மக்ரோன் நேரடி பதிலை அளிக்க மறுத்து இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ரபேல் ஒப்பந்தம் குறித்த கேள்விகளை இந்திய பத்திரிக்கையாளர்கள் முன்வைத்தனர். முறைகேடு புகார்களை மறுக்காத மக்ரோன், ஒப்பந்தம் கையெழுத்தான போது தாம் பதவியில் இல்லை என்று மட்டுமே கூறினார். ரபேல் ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே கையெழுத்தானது என்றும் இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடியின் கூற்றையே சுட்டிக் காட்ட விரும்புவதாகவும் மக்ரோன் தெரிவித்தார். ரபேல் தொடர்பான குற்றச் சாட்டுகளை மறுக்காத மக்ரோன், நேரடியாக பதில் அளிக்க மறுத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து உத்தரப்பிரதேசம் பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது,\'பிரதமரையும், நிதி அமைச்சரையும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்; ரபேல் போர் விமானத்தின் விலை என்ன ? நிதியமைச்சர் அருண் ஜெட்லீ ஏன் பொய் சொன்னார் ? ரபேல் போர் விமானங்களுக்கு ரூ. 526 கோடிக்குப் பதிலாக ரூ.1600 கோடி ரூபாய் செலுத்தியது ஏன் ? ரூ.45,000 கோடி கடன் வைத்திருக்கும் அனில் அம்பானியை ரபேல் ஒப்பந்தத்தில் சேர்த்தது ஏன்.\' இவ்வாறு அவர் கூறினார். ரபேல் ஊழல் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், கடற்படையில் பயன்படுத்தும் ரபேல் M ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. இந்திய கடற்படையில் உள்ள இரண்டு விமானம் தாங்கி போர் கப்பல்களிலும் ரபேல் M போர் விமானங்களை பயன்படுத்தலாம் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை