இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி; வங்கதேசத்தை வீழ்த்தியது

தினமலர்  தினமலர்
இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி; வங்கதேசத்தை வீழ்த்தியது

துபாய்: வங்கதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பை 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் கேப்டன் ரோகித் அரை சதம் விளாச இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயத்தால் விலகிய பாண்ட்யாவுக்குப்பதில் ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

ஜடேஜா கலக்கல் :

வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 'சுழலில்' சாகிப் (17), முஷ்பிகுர் ரகிம் (21), முகமது மிதுன் (9) சிக்கினர். புவனேஷ்வர் 'வேகத்தில்' கேப்டன் மொர்டசா (26) அவுட்டானார். தொல்லை தந்த மெகதி 42 ரன்களில் திரும்பினார். முஸ்டபிஜுர் ஒரு ரன் மட்டும் எடுத்தார். முடிவில், வங்கதேச அணி 49.1 ஒவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார்.

ரோகித் விளாசல் :

எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அபார துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 61 சேர்த்தபோது, தவான் (40) ஆட்டமிழந்தார். சாகிப் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித் அரை சதம் எட்டினார். ரூபெல் பந்தில் ராயுடு (13) சிக்கினார். பின் வந்த தோனி, ரோகித்துடன் இணைய வெற்றி எளிதானது. மொர்டசா பந்துவீச்சில் தோனி இரண்டு பவுண்டரி அடித்தார். இவர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 36.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (83), தினேஷ் கார்த்திக் (1) அவுட்டாகாமல் இருந்தனர். லீக் சுற்றில் ஹாங்காங், பாகிஸ்தானை வென்ற இந்திய அணி நேற்று வங்கதேத்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

மூலக்கதை