அமெரிக்காவை நெருங்கும் ஃபுளோரன்ஸ் புயல்: மணிக்கு 215கி,மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவை நெருங்கும் ஃபுளோரன்ஸ் புயல்: மணிக்கு 215கி,மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை

கரோலினா: அமெரிக்காவில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். ஃபுளோரன்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த சூறாவளி அமெரிக்காவில் இன்னும் சில தினங்களில் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியின் காரணமாக மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல்பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக இந்த ஃபுளோரன்ஸ் சூறாவளி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியானது வரும் வெள்ளிக்கிழமை, வட கரோலினா, வில்மிங்டன் அருகே நிலச்சரிவை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்கா வானிலை மையம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா, மேரிலாந்து, வாஷிங்டன் டி.சி, வடக்கு மற்றும் தென் கரோலினா ஆகிய மாநிலங்களில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சூறாவளியால் சில பகுதிகளில் மழைப்பொழிவானது 64 செ.மீ. வரை இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். வடக்கு மற்றும் தென் கரோலினா ஆகிய இரண்டு மாநிலங்களின் கரையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மூலக்கதை