பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா - மியான்மர் தயார்

தினமலர்  தினமலர்

புதுடில்லி:வட கிழக்கு மாநிலங்களில் வாலாட்டும் பயங்கரவாதிகளை ஒடுக்க, மியான்மர் நாட்டு ராணுவத்துடன் இணைந்து, நம் ராணுவம், அதிரடி வேட்டையை துவக்கவுள்ளது.
நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களான, அசாம், நாகாலாந்து, மணிப்பூரில், சில பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.காம்டபூர் விடுதலை கழகம், ஒருங்கிணைந்த அசாம் விடுதலை முன்னணி, போரோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி போன்ற, சிறு பயங்கரவாத அமைப்புகள், அவ்வப்போது தாக்குதல் நடத்தி, அமைதியை சீர்குலைத்து வருகின்றன.அண்டை நாடான, மியான்மர் உதவியுடன், இந்த பயங்கரவாத அமைப்புகளை, நம் ராணுவம் வேட்டையாடி வருகிறது. சில மாதங்களுக்கு முன், 'ஆப்பரேஷன் சன்ரைஸ்' என்ற பெயரில், இரு நாட்டு ராணுவமும் இணைந்து, பயங்கரவாதிகளை வேட்டையாடின.இந்நிலையில், 'ஆப்பரேஷன் சன்ரைஸ் - 2' என்ற, அடுத்த நடவடிக்கை, இன்று முதல் துவங்க உள்ளது.
நம் ராணுவத்துடன், மியான்மர் ராணுவம் இணைந்து, அவரவர் எல்லை பகுதிகளில், பயங்கரவாதிகளை வேட்டையாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.எல்லை பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை கண்டறிந்து, அவற்றை முற்றிலும் அழிக்க, இரு நாட்டு ராணுவ வீரர்களும் தயாராகி வருவதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை