இந்தியா-பாக்., கிரிக்கெட் போர் அல்ல

தினமலர்  தினமலர்
இந்தியாபாக்., கிரிக்கெட் போர் அல்ல

இஸ்லாமாபாத்: இந்தியா- பாக்., கிரிக்கெட் போட்டி போரல்ல. அதனால் இருதரப்பு ரசிகர்களும் அமைதி காக்க வேண்டும் என பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாக்., அணி, இந்தியாவை ஒருமுறை கூட வென்றது கிடையாது. 1992 ம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறை கூட பாக்., உலகக்கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இந்த மோசமான நிலை இம்முறை மாறும் என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாக்., அணிகள் மோதும் போட்டி நாளை (ஜூன் 16) மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. எல்லை நடக்கும் தாக்குதல்களால் இரு நாடுகளிடையே பல காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையேயான உறவில் உள்ள விரிசல் பெரிதாகி உள்ளது. இத்தகைய சூழலில் இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.

பொதுவாகவே இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி என்றாலே உச்சகட்ட பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிலவும். தற்போது இருநாடுகளிடையே போர் மூளும் அளவிலான சூழல் இருக்கும் போது கிரிக்கெட் போட்டி நடப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து வாசிம் அக்ரம் ரசிகர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், இது போர் அல்ல. அதனால் இரு தரப்பு ரசிகர்களும் அமைதி காக்க வேண்டும். இது பெரிய விஷயம் அல்ல. ஒரு அணி வெல்வது, மற்றொரு அணி தோற்பதும் விளையாட்டில் நடக்க கூடியது தான். விளையாட்டை உற்சாகமாக கண்டுகளிக்க வேண்டும். பாக்., ஆல் இந்தியாவை வெல்ல முடியும். இந்தியா வலிமையான அணி தான். அதே சமயம் அதை வீழ்த்தும் அளவிற்கு பாக்., திறமையான அணியாக உள்ளது என்றார்.

மூலக்கதை