இயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை

தினகரன்  தினகரன்
இயற்கை மீது கைவைத்ததால் வந்த வினை

உலகிற்கே எச்சரிக்கை விடுத்த ‘ஏரல்’ அவசர சிகிச்சையால் உயிர் பெறுகிறதுதுபாய்: ஏரல் கடல் என்றழைக்கப்படும் உலகின் நான்கு பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்த ஏரல் ஏரி 1991ல் சோவியத் யூனியன் பிரிந்தபோது கஜகஸ்தான் நாட்டின் தெற்குப்பகுதியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் வடக்கிலும் உள்ளடக்கியதாக அமைந்தது. 1960ல் 68 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்த இந்த ஏரியானது காலப்போக்கில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக மிக சிறியதாக சுருங்கியது.உலகெமெங்கும் இயற்கையை சிதைத்தால் நீர்நிலைகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என்பதற்கு உதாரணமாக இந்த ஏரி சுட்டிகாட்டப்படுகிறது. ஒரு சமயத்தில் வட ஏரல் கடல் ஏரியின் ஆழம் 43 மீட்டர் ஆகும். ஆண்டுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டன் மீன்கள் இங்கு பிடிக்கப்பட்டு வந்தது. 40 ஆயிரம் பேர் மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஒருங்கிணைந்த ரஷ்யாவில் 6ல் ஒரு பகுதி மீன், ஏரல் ஏரியில் இருந்து கிடைத்தது. இப்பகுதியில் கிடைக்கும் மீன்கள் மிகுந்த ருசி மிகுந்ததாக இருந்ததால் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைத்தது இதனையொட்டி இப்பகுதியில் ஏராளமான மீன் தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வந்தன.நீர் வற்ற தொடங்கி மீன்கள் பிடிபடுவது குறைந்து நாளுக்கு நாள் பெரும்பாலான மீன் தொழில்  நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன முற்றிலுமாக மீன் பிடி தொழில் சரிந்து விட்டது. மேலும், ஏரியில் நீரின்  பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து வந்ததை சேட்டிலைட் படங்கள் தெளிவாக காட்டின. அந்நாட்டு அரசாங்கம் இயற்கை பேரழிவாக இதனை அறிவித்தது. உலகின் மிக மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவாக இது கருதப்பட்டது. உலகமெங்கும் ஏரல் ஏரியின் அழிவு குறித்து பேசப்பட்டது.இந்த அழிவிற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது நீர் மேலாண்மை முறையாக கையாளப்படாததுதான். குறிப்பாக இந்த ஏரியின் நீர் ஆதாரமாக இருக்கும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டன. அதிகமான நீரை உறிஞ்சும் பருத்தி விவசாயத்தை அதிகப்படுத்தியது, ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து நீரும் மிகவும் மாசுபட்டது. இது போன்ற பல்வேறு இயற்கைக்கு எதிரான காரணங்கள் ஏரல் ஏரிக்கு இறங்குமுகமாகி விட்டது.இயற்கை பேரழிவாக கருதப்படும்  இந்த ஏரியின் பாதிப்பு உலகமெங்கும் பரவலாக பேசும் பொருளாகிவிட்ட நிலையில் விழிக்க தொடங்கிய  அரசாங்கங்கள் தற்போது இந்த ஏரியை மீட்டெடுத்து மீண்டும் பழைய நிலையை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. உலக வங்கியும் இதற்கு உதவ முன் வந்து பல்வேறு திட்டங்கள் கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக கஜகஸ்தான் அரசு ஏரியை மீட்டெடுக்கும் வகையில் இத்திட்டங்களை மேற்கொள்கிறது. 2005ல் அப்பகுதியில் அணை ஒன்றை எழுப்பி ஏரியின் நீர் மட்டத்தை சற்றே உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 7 அடி வரை நீர்மட்டம் உயந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரின் உப்புத்தன்மையும் குறைந்து வருகிறது. ஆண்டுக்கு 7 ஆயிரம் டன் என்ற அளவில் மீன்கள் பிடிபட்டு  மீன் பிடி தொழிலும் புதுபிக்கப்பட்டு வருகிறது. ஏரி மீண்டு விடும் என்ற நம்பிக்கை துளிர்த்து வருவதை தற்போதைய செயற்கைக்கோள் படங்களும் நம்பிக்கையூட்டுகிறது. மனிதன் கையில் இருப்பதை கவனிக்க தவறிவிட்டு பின்பு பெரும் சிரத்தை எடுத்து அதனை மீட்க பெரும்பாடுபடும் பல நிகழ்வுகள் இவ்வுலகில் நடைபெற்று வருகிறது. அத்தகைய செயல்களில் இந்த ஏரியும் ஒன்றாக அமைந்துவிட்டது. விரைவில் இந்த ஏரல் ஏரி ஏற்றமடைந்து பழைய நிலையை அடைந்து இயற்கை செழிக்க வேண்டும் என்பதே உலக மக்களின் ஆவலாக உள்ளது.

மூலக்கதை