16 மணி நேரத்திற்கு மேல் ஓடுபாதையில் சிக்கிய விமானம்!

PARIS TAMIL  PARIS TAMIL
16 மணி நேரத்திற்கு மேல் ஓடுபாதையில் சிக்கிய விமானம்!

ஹாங்காங்கிற்குச் செல்ல வேண்டிய விமானம், கனடாவில் 16 மணி நேரத்திற்கு மேல் ஓடுபாதையில் சிக்கிக்கொண்டது.
 
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் நியூவார்க் நகரிலிருந்து ஹாங்காங்கிற்கு விமானம் சனிக்கிழமை புறப்பட்டது.
 
ஆனால், நடுவானில் பயணி ஒருவருக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால், விமானம் கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கூஸ் பே (Goose Bay) விமான நிலையத்தில் தரையிறங்கியது.
 
மருத்துவ உதவியாளர்கள், பயணியை விமானத்திலிருந்து வெளியேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
அதன் பிறகு விமானம் அங்கிருந்து புறப்பட முடியவில்லை.
 
கூஸ் பேயின் தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் 30 டிகிரி செல்சியஸாக இருந்ததால் விமானத்தின் கதவுகளில் ஒன்று உறைந்து போனது அதற்குக் காரணம்.
 
இரவு நேரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இல்லாததால் பயணிகள் விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை.
 
குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விமானச் சிப்பந்திகள் கொடுத்த இலேசான போர்வைகள் போதுமானவையாக இல்லை.
 
விமானத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் காத்துக்கொண்டிருந்த பயணிகளுக்குச் சாப்பாடும் தண்ணீரும் குறைந்துகொண்டே வந்ததால், அவர்கள் ஆத்திரமடைந்தனர்..
 
ஞாயிற்றுக்கிழமைக் காலையில் மாற்று விமானம், கூஸ் பேயைச் சென்று சேர்ந்தது.
 
மாற்று விமானத்திற்குப் பயணிகள் மாற்றப்பட்டனர். கூஸ் பேயிலிருந்து புறப்பட்ட விமானம், பின்னர் நியூவார்க்கைச் சென்று சேர்ந்தது.
 
அமெரிக்காவின் வடகிழக்கிலும் கனடாவின் கிழக்குப் பகுதியிலும் வீசிக்கொண்டிருக்கும் கடுமையான பனிப் புயலால், விமானச் சேவைகள் பல ரத்தாகியுள்ளன. 

மூலக்கதை