இந்திய கோடீஸ்வரர்கள் சொத்து ஒவ்வொரு நாளும் ரூ.22000 கோடி உயர்வு

தினமலர்  தினமலர்

தாவோஸ் : இந்தியாவில் உள்ள ஒரு சதவீதம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு நாளும் ரூ.2200 கோடி அதிகரித்துள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 2018 ம் ஆண்டில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நாளும் ரூ.2200 கோடி என்ற அளவில் உயர்ந்துள்ளது. சுமார் 13.6 கோடி இந்தியர்கள் 2004 ம் ஆண்டு முதல் ஏழைகளாகவே உள்ளனர். இந்திய பொருளாதார சமநிலையின்மை வறுமைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கியதுடன், பொருளாதார நிலையை சீர்குலைத்து, உலகம் முழுவதும் சாமானிய மக்களின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.
நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 77.4 சதவீதம், இந்திய கோடீஸ்வரர்களாக இருக்கும் 10 சதவீதம் மக்களிடம் உள்ளது. ஒரு சதவீதம் கோடீஸ்வரர்களிடம் 51.53 சதவீதம் சொத்துக்கள் உள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள்தொகையான 60 சதவீதம் மக்களிடம் வெறும் 4.8 சதவீதம் செல்வ வளம் மட்டுமே உள்ளது.

2018 முதல் 2022 ம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் இந்தியா 70 புதிய கோடீஸ்வரர்கள் உருவாக்க வாய்ப்புள்ளது. இந்த பொருளாதார சமநிலையின்மையால் இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

புதிதாக 18 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு முதல் முறையாக ரூ.28 லட்சம் கோடியை எட்டி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நாட்டின் மருத்துவ, சுகாதாரம், தூய்மை, குடிநீருக்காக செலவிடும் ரூ.2,08,166 கோடி, இந்திய கோடீஸ்வர்களில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பான ரூ.2.8 லட்சம் கோடியை விட குறைவு. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை