தாடியை இழுத்து, முகத்தில் குத்து அமெரிக்க இனவெறியர் சீக்கியர் மீது தாக்குதல்

தினகரன்  தினகரன்
தாடியை இழுத்து, முகத்தில் குத்து அமெரிக்க இனவெறியர் சீக்கியர் மீது தாக்குதல்

நியூயார்க்: அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் உள்ள கடையில் வேலை செய்து வருபவர் ஹர்விந்தர் சிங் தோத். கடந்த திங்களன்று ஆன்ட்ருயூ ராம்சே என்பவர் ஹர்விந்தர் கடைக்கு சென்றார். சிகரெட்டுகளுக்கு சுற்றும் ரோலிங்  பேப்பர் வேண்டும் என்று ராம்சே கேட்டார். ஆனால், அவரிடம் அடையாள அட்டை இல்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவருக்கு  சிகரெட்டுக்கான பேப்பரை விற்க முடியாது என அங்கிருந்த மற்றொரு ஊழியர்  தெரிவித்துள்ளார். இதனால், வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, கடையை விட்டு வெளியேறும்படி ராம்சேவிடம் ஹர்விந்தர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராம்சே, ஹர்விந்தரின் தாடியை பிடித்து இழுத்ததோடு, அவரது முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அவரை பிடித்து தள்ளி  தாக்கினார். அவர் மீது காலணிகளை வீசியதோடு, அவரது தலைப்பாகையையும் இழுத்தார். இந்த தாக்குதலில் ஹர்விந்தருக்கு முகத்தில் ரத்தம் வழிந்தது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அங்கு விரைந்த போலீசார். ராம்சே மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டை காட்டிலும் கடந்தாண்டு இந்த தாக்குதல் 40 சதவீதம் அதிகமாகி இருக்கிறது.  

மூலக்கதை