விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை!

செம்மொழியாம் நம் தமிழின் தொன்மையினை இலக்கியங்களின் வாயிலாகவும் வாழ்வியல் அடையாளங்கள் மூலமாகவும் நாம் அறிகிறோம். இவற்றினைக் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்த, பல்கலைக்கழகங்களில் இருக்கைகளை அமைப்பதில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து வெற்றிகள் பலவற்றை ஈட்டி வருகின்றோம். இந்த வகையில் அடுத்து அமையவிருக்கிறது “யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை (Thirumoolar Tamil Chair for Yoga Research)”.

உலகெங்கிலும் யோகப் பயிற்சியைக் குறித்த விழிப்புணர்வு பெருகிவருகிறது. இதற்கான காரணங்களாக, நடைமுறையில் இருக்கும் மேற்கத்திய மருத்துவமுறைகளின் குறைபாடுகளான மருந்துகளின் பக்க விளைவுகள், மருத்துவச் செலவு, மற்றும் மனம், ஆன்மா ஆகியவற்றைத் தவிர்த்து உடலைத் தனிக்கருவியாகப் பார்க்கும் அறிவியல் சிந்தனை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குறைந்த செலவில் நோய்த் தடுப்பு, நோய் தீர்ப்பு, மற்றும் நீடித்த நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்தும் முறைகளாக யோக முறைகளை மக்களும், மருத்துவமனைகளும், சமூக அமைப்புக்களும் பயன்படுத்த முன்வந்துள்ளனர். யோகக் கலையின் முன்னோடிகளாக விளங்குபவை நமது தமிழ்ச் சித்தர்களின் நூல்கள். பதினென் சித்தர்கள் முதல் பல்வேறு சித்தர்களின் மரபில் பயிலப்பட்டுவரும் யோக அறிவியலானது தமிழர்களின் ஞானவிளக்காகப் போற்றப்படுகிறது. இன்னும் வெளியுலகிற்குச் சொல்லப்படாமல் சுவடிகளிலும், தமிழ் இலக்கிய ஏடுகளிலும் மட்டுமே இருக்கும் இம்முறைகளை ஆராய்ந்து வெளியுலகிற்குச் சொல்லி அதன் மூலம் தமிழின் பெருமையை உலகிற்குச் சொல்லும் காலம் இன்று கனிந்துள்ளது.  

இந்த வகையில் திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் யோக முறைகளை, குறிப்பாக மூச்சுப் பயிற்சி முறைகளை ஆராய்ந்து வருபவர் முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன். தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில்  (Medical University of South Carolina) நடத்தப்படும் இவரது ஆராய்ச்சி உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மூச்சுப் பயிற்சியின் மூலம் உருவாகும் உமிழ்நீரில் உடலுக்கும் மனதுக்கும் பயன்விளைவிக்கும் பற்பல வேதிப்பொருட்கள் இருப்பதை இவர் கண்டறிந்துள்ளது நமது சித்தர்களின் மருத்துவ இலக்கியங்களை இக்கால அறிவியல் முறைகளின் மூலம் நிறுவுவதில் முதற்படி எனக் கொள்ளலாம். இத்தகைய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு திருமூலரின் பெயரில் மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஒரு இருக்கையை நிறுவுவது குறித்து தமிழ் இருக்கை அமைப்பு முடிவுசெய்துள்ளது. இதே நேரத்தில் முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன் மூலம் ஒரு இனிய செய்தியும் வந்துள்ளது. அதாவது தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகம் இந்த யோக ஆராய்ச்சிக்கு ஐநூறாயிரம் அமெரிக்க வெள்ளிகளை (US$500,000) அளிக்க முன்வந்துள்ளதே அது. உலகத் தமிழ் அமைப்புக்கள் இதற்காக 1.5 மில்லியன் வெள்ளிகளைத் திரட்டித் தந்தால் மொத்தம் கிடைக்கும் இரண்டு மில்லியன் வெள்ளிகளில் இவ்விருக்கை திருமூலரின் பெயரால் அமைவது உறுதியாகும்.  ஒரு மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைவது இதுவே முதன்முறை. இந்த இருக்கையின் மூலம் யோகப் பயிற்சிகள் எவ்வாறு உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, இவற்றை எந்தெந்த நோய்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், யோகத்தைக் கற்பிக்கும் முறைகளை எப்படி உருவாக்கலாம் என்பவற்றை ஆராய்ச்சியின் மூலம் சாதிக்கமுடியும். உலகிற்கு உடல்நலத்தைக் கற்பிக்கும் மூத்த மொழியாகத் தமிழை உலகம் கொண்டாட வேண்டும், அதற்காக இவ்விருக்கை நிறுவப்படவேண்டும் என்பது தமிழ் இருக்கை அமைப்பின் விழைவாகும். இதற்காக உலகத் தமிழர்கள் மனமுவந்து நிதியளித்து இதனை விரைவில் செயல்படுத்த இணையுமாறு அன்போடு அழைக்கிறோம். உங்கள் கொடைகளைக் கீழ்க்கண்ட இணையத் தளம் வழியாகச் செலுத்தலாம்.

http://harvardtamilchair.org/thirumoolar

இந்த இருக்கைக்காகத் தனது மூச்சுப் பயிற்சிப் பட்டறைகள் மூலம் நிதிகளைத் திரட்டி வருகிறார் முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன். இவரது பட்டறைகளை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உங்கள் தமிழ்ச் சங்கத்தில், சுற்றுப்பகுதிகளில் ஏற்பாடு செய்வதன் மூலம் நல்வாழ்வுக்கான மூச்சுப் பயிற்சிகளை கற்றுக் கொள்வதுடன் ஒரு உயரிய செயலுக்கான நன்கொடையையும் நீங்கள் வழங்கி மகிழலாம். இவரது காணொளிகளை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=aIfwbEvXtwo; மற்றும் www.PranaScience.com (தொடர்புக்கு)

மூலக்கதை