அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா

-பிரசாத் பாண்டியன்

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் டிசம்பர் 08, 2018, சனிக்கிழமையன்று நண்பகல் 12:30 மணி முதல் நடைபெற்ற "மகாகவி பாரதியாரின்" 137வது பிறந்தநாளில் டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூ செர்சியை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

செல்வி. கண்மணி துரைக்கண்ணன் விழாவினை ஒருங்கிணைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. திருமிகு.மெர்லின் தீபன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி இருபிரிவாக நடைபெற்றது. 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்து கொண்டு பாரதியாரின் படத்தை வரைந்து வந்திருந்த மக்களை வியப்பிற்குள்ளாக்கினர். 7 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் ஜெசிகா ரேபன் முதலிடத்தையும், திரிபுவன் இரண்டாம் இடத்தையும், அகஷத் பிரம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.  7 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் சுபிக்‌ஷா ஶ்ரீநிவாசன் வித்யா முதலிடத்தையும், அறிவாற்றல் இராஜ்குமார் இரண்டாம் இடத்தையும், கெளதம் ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

சிறுவர்களுக்கான வினாடி வினா போட்டியை திருமிகு. ராஜ்குமார் கலியபெருமாள் இனிமையாக நடத்தினார். குழுவிற்கு பாரதியார் பணியாற்றிய சுதேசிமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா மற்றும் சூரியோதயம் என்ற இதழ்களின் பெயர்கள் சூட்டப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. நான்கு குழுவினர் கலந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி நடுவர்களையே கலங்கடித்தனர். 5 சுற்றில் முடியவேண்டிய போட்டி 29வது சுற்றிலும் நிறைவடையாமல் முதல் இடத்திற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் முதல் பரிசை சக்கரவர்த்தினி அணியை சேர்ந்த.பிரத்யூஷ் மற்றும் இந்தியா அணியை சேர்ந்த யதுராஜ் சுந்தர்ராஜ் மற்றும் செல்வன். வேணு தனபால் பகிர்ந்து கொண்டனர். மூன்றாம் இடத்தை அறிவாற்றல் மற்றும் ஆதித் வென்றனர்.

விழாக்குழுவில் ஒருவரான திருமிகு.பிரசாத் பாண்டியன் தரவுகள் மற்றும் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் வினாடி வினாவின் கேள்விகள் தயாரிக்க விழாக்குழு எடுத்த முயற்சியை எடுத்துக் கூறினார்.

பின்னர் பெரியவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில் பலர் கலந்து கொண்டு "பாரதியாரின் சிந்தனைகளை" பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினார்கள். விழாவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிக்கு திருமிகு.அகத்தியன் ஜான் பெனடிக்ட் மற்றும் முனைவர். வாசு அரங்கநாதன்  இருவரும் நடுவர்களாக இருந்து விழாவை சிறப்பித்துக் கொடுத்தனர்.  அதில் முதல் பரிசைத் தட்டிச்சென்றார் திருமிகு. ரம்யா கார்த்திகேயன்.  திருமிகு. விஜயலட்சுமி ராமசுப்பிரமணியம் மற்றும் திருமிகு. தேவனாதன் தனபால் அருமையாகப் பேசி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை தட்டிச்சென்றனர்.

அதன் பிறகு திருமிகு. தீபன் அவர்கள் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி பற்றி அழகான கவிதையை பாடிச் சிறப்பித்தார்.

திருமிகு. பிரசாத் அவர்கள், பாரதியார் பற்றி அறியாத பல நுண்ணிய தகவல்களை அரங்கத்தில் எடுத்துரைத்து வந்தோரை வியப்பில் ஆழ்த்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினரில் ஒருவரான திரு.வாசு அரங்கநாதன், “பாரதியார் கவிதைகளின் உலகளாவிய ஈர்ப்பு” என்ற தலைப்பில் மிக அருகையாக பல தகவல்களைக் கூறினார்.

விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினரான திருமிகு. அகத்தியன் ஜான் பெனடிக்ட், “பாரதியார் - நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா” என்ற தலைப்பில் பாரதியாரின் விடுதலை எழுச்சி பாடல்கள், தமிழ் பாடல்களின் கருத்துகளை கவிதையுடன் சேர்ந்து பேசி பாரதியாரின் புகழை போற்றினார்.

விழாக்குழுவில் ஒருவரான  திரு.துரைக்கண்ணன் நன்றியுரை வழங்கினார்.

விழா முடிவில் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

 

மூலக்கதை