5 நாட்களில் 400 பொதுமக்கள் பலி ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து சிரியா அதிபர் போர்க்குற்றம் செய்கிறார்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து சிரியா அதிபர் போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாகவும், கடந்த 5 நாட்களில் 400 பேரை அவர் கொன்று விட்டதாகவும் அமெரிக்க பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை துணை செய்திதொடர்பாளர் ராஜ் ஷா கூறுகையில்,’ ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு சொந்த நாட்டு மக்களையே அழிக்கும் வேலையில் சிரியா அதிபர் ஆசாத் ஈடுபட்டு வருகிறார். பிரிவினைவாதிகள் அதிகம் உள்ள பகுதியில் ரஷ்யா துணையுடன் அவர் தாக்குதல் நடத்தி வருகிறார். அங்கு விமானங்கள் மூலம் குண்டு வீசி அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். கடந்த 5 நாட்களில் மட்டும் 400 பேர் பலியாகி விட்டனர். ஆசாத் ஏற்கனவே போர் குற்றத்தில் ஈடுபட்டவர்தான். தனது சொந்த நாட்டு மக்களை விஷவாயு மூலம் கொன்று குவித்தவர் அவர். யாரும் நினைக்காத செயல்களில் எல்லாம் ஈடுபட்டவர். இப்போது ரஷ்யாவுடன் இணைந்து கொடூரமாக செயல்பட்டு வருகிறார்’ என்றார். அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நவ்ரத் கூறுகையில், ‘சிரியாவில் ஒருவாரத்தில் 400 பொதுமக்கள் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. இதில் ரஷ்யா மட்டும் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை. ஈரானுக்கும் தொடர்பு உள்ளது. இதை நாங்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறோம்’ என்றார்.பாக். நடவடிக்கையில் டிரம்ப்புக்கு திருப்தி இல்லை தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷா கூறுகையில், ‘‘தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் திருப்தி அடையவில்லை. அமெரிக்கா உடனான உறவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போதுதான் பாகிஸ்தான் முதல்முறையாக உறுதியான ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதில் இன்னும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டால்தான் அதிபரை திருப்திப்படுத்த முடியும்’’ என்றார்.

மூலக்கதை