அவசரநிலை நீட்டிப்புக்கு அதிருப்தி உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

மாலே : ‘மாலத்தீவின் அரசியல் ெநருக்கடிக்கு எதிராக இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்’ என்று மாலத்தீவு எச்சரித்துள்ளது. மாலத்தீவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு கடந்த 5ம் தேதி 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இது முடிந்த நிலையில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் மேலும் 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதேபோல், இந்தியாவும் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவு துறை நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில், ‘மாலத்தீவில் நடைபெற்று வரும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்த உண்மைகள் மற்றும் யாதார்த்தங்களை புறக்கணித்து விட்டு இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை அதிபர் அப்துல் யாமீன் தலைமையிலான அரசு கவனத்தில் கொள்கிறது. மாலத்தீவின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகவும் கடினமான காலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, சர்வேதேச சமூகத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் இந்தியா உள்ளிட்ட  நட்பு நாடுகள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது மாலத்தீவின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடும். 30 நாட்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு பற்றி இந்தியா கூறியுள்ள கருத்து மாலத்தீவு அரசிலயமைப்பு மற்றும் சட்டங்களுக்கு எதிரானது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவலையை எதிர்கொள்வதற்காக மாலத்தீவு அரசாங்கம் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான நிலையான உறுதிபாட்டை கொண்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.செப்டம்பரில் அதிபர் தேர்தல்மாலத்தீவில் நிலவும் அரசியல் கொந்தளிப்புக்கு இடையே, ‘மாலத்தீவில் வரும் செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடத்தப்படும்’ என அந்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அது ெவளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டன’ என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிபர் அப்துல்லா யாமீன் வரவேற்றுள்ளார். அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இத்தேர்தல் அறிவிப்பை அதிபர் வரவேற்கிறார். இதில் தொடர்புடையவர்கள் முறையாக தேர்தல் நடத்த ஆணையத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை