நிலவுக்கு வீரர்களை அனுப்ப அமெரிக்கா மீண்டும் திட்டம்

தினமலர்  தினமலர்
நிலவுக்கு வீரர்களை அனுப்ப அமெரிக்கா மீண்டும் திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும்படி, 'நாசா' எனப்படும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு, அந்நாட்டு அதிபர், டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க விண்வெளி வீரர்கள், 1960 மற்றும், 1970ம் ஆண்டுகளில், அப்பல்லோ விண்வெளி திட்டங்களின்போது, நிலவுக்கு சென்று, ஆராய்ச்சிகள் நடத்தினர்.
இந்நிலையில், மீண்டும், நிலவுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்துக்கு, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட பின், நிருபர்களிடம் நேற்று, டிரம்ப் கூறியதாவது:
இந்த முறை, நிலவுக்கு செல்லும் அமெரிக்க வீரர்கள், நம் தேசியக் கொடியை நடுவதுடன், நம் அடித்தளத்தை ஆணித்தரமாக பதித்து வருவர். செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் திட்டத்தையும் அடுத்த கட்டமாக தொடர்வோம். என்றாவது ஒரு நாள், தொலைவில் உள்ள வேறு பல உலகங்களுக்கும் நம் வீரர்கள் செல்வர். இந்த நடவடிக்கையால், விண்வெளி ஆராய்ச்சி துறையில், அமெரிக்க முன்னிலை வகிக்கும். எதிர்கால சந்ததியினரை உத்வேகப்படுத்தும் முயற்சியாக, அமெரிக்க அரசு சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளது.
விண்வெளி துறையில் நம் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்.ராணுவம் உட்பட, பல்வேறு துறைகளில், விண்வெளி ஆய்வின் தாக்கம் அதிகளவில் இருக்கும். எனவே, இத்துறையில் நாம் முன்னோடியாக திகழ்வோம். நம் வலிமையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை