பாகிஸ்தான் நிதியமைச்சர் தேடப்படும் குற்றவாளி

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: ஊழல் புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர், இஷாக் தர், 67 தேடப்படும் குற்றவாளி என, பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் போலியான நிறுவனங்களின் பெயரில், பல, வி.ஐ.பி.,க்கள் செய்த முதலீடு, 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் அம்பலப்படுத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது குடும்பத்தார் மற்றும் நிதியமைச்சர் இஷாக் தர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றன.இது தொடர்பாக விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தகுதிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது. அதன்படி பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகினார். நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.வருமானத்துக்கு அதிகமாக, 83 கோடி ரூபாய் சேர்த்ததாக, நிதியமைச்சர் இஷாக் தர் மீதும் தனியாக வழக்கு தொடரப்பட்டது. பிரிட்டன் தலைநகர்
லண்டனில் சிகிச்சை பெற்று வரும் தர், வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், அவரை, தேடப்படும் குற்றவாளியாக, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. மூன்று நாட்களுக்குள் காப்புத் தொகையை செலுத்தா விட்டால், அவரது சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை