ஏமனில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: 4 பேர் பலி

தினமலர்  தினமலர்

சனா: ஏமனில் டி.வி. நிலையம் மீது சவுதி கூட்டுப்படை தாக்குதல் 4 பேர் பலியானார்கள்.
ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கும் இடையேயான கூட்டணியில் திடீர் பிளவு
ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கடந்த வாரம் சலே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஏமனில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சனாவில், தொலைக்காட்சி நிலையம் ஒன்றின்மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.
இதுபற்றி கிளர்ச்சியாளர்களின் அல் மசிரா 'டிவி' கூறுகையில், ''சவுதி, அமெரிக்க பகைவர்கள் ஏமன் தொலைக்காட்சி நிலைய கட்டிடம் மீது குண்டுவீச்சு நடத்தினர். இதில் 4 காவலர்கள் பலியானார்கள்'' என தெரிவித்தது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த தலைமை காவலர் கூறுகையில், ''இது ராணுவ நிலை அல்ல. இங்கு ஆயுதங்களும் கிடையாது. இது காவலர்களாகிய நாங்கள் தங்கி வந்த கட்டடம். இதன்மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்'' என்று கூறினார்.
இந்த தாக்குதல் பற்றி சவுதி கூட்டுப்படைகள் தரப்பில் கருத்து வெளியிடப்படவில்லை.

மூலக்கதை