இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையே கடும் மோதல் : தொடர் போராட்டத்தால் வளைகுடா நாடுகளில் பதற்றம்

தினகரன்  தினகரன்

ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு வெளியானதுமே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை காஸா பகுதிகளில் மோதல் மூண்டுள்ளது. காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட 2 ராக்கெட்டுகளும் பாதியிலேயே விழுந்து விட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. பல இடங்களில் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது பாலஸ்தீனியர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். ஜெருசலேம் பேருந்து நிலையத்தில் பாலஸ்தீனியர் கத்தியால் குத்தியதில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி பேசிய இஸ்ரேலிய காவல்தறை அதிகாரி ரோசன் பெல்ட், இந்த பகுதிக்கு கத்தியால் தாக்கிய மர்மநபர் எப்படி வந்தார் என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், தீவிரவாத தாக்குதல்களை தடுக்க ஜெருசலேமிலும் அதனை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஈருவர் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் அறிவிப்பால் வளைகுடா நாடுகள் உட்பட இஸ்லாமிய நாடுகள் அனைத்திலுமே போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஜெருசலேம் விவகாரத்தில் அரபு நாடுகளின் அவசர உச்சிமாநாடு ஜோர்டானில் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை