சிரியாவில் இருந்து 'ஒயிட் ஹெல்மெட்' அமைப்பினர் மீட்பு

தினமலர்  தினமலர்

டமாக்கஸ்: சிரியாவில் இருந்து, 'ஒயிட் ஹெல்மெட்' அமைப்பை சேர்ந்த 800 பேரை, இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பாக மீட்டது.மத்திய கிழக்கில் உள்ள சிரியா கடந்த எட்டு ஆண்டுகளாக சிரிப்பை மறந்து, மரண வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது. அங்கு 2011ல் தொடங்கிய உள்நாட்டு போரில் ஏற்கனவே, 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் கூட ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகின்றனர்.அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும், போராட்டக்குழுவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், மேலும் சன்னி பிரிவுக்கு ஆதரவாக ஐ.எஸ், பயங்கரவாதிகளும் என மும்முனை போராக நடந்து வருகிறது.ஒயிட் ஹெல்மெட் யார்2014ம் ஆண்டு சிரியாவை சேர்ந்த சிலரால் 'ஒயிட் ஹெல்மெட்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது இதில் 3000க்கும் அதிகமான தன்னார்வலர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பெண்களும் உள்ளனர். வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்து கொண்டு, காயமடைந்தவர்களையும், உயிருக்கு போராடுபவர்களையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கும் உன்னத பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 1.14 லட்சம் பேரை காப்பாற்றியுள்ளனர். இதில் இந்த அமைப்பை சேர்ந்த 204 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.இந்நிலையில் ஆபத்தான சூழலில் சிக்கியுள்ள 'ஒயிட் ஹெல்மெட்' தன்னார்வலர்களை மீட்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐ.நா., அமைப்பு இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்தது.இதையடுத்து மீட்பு நடவடிக்கையை தொடங்கிய இஸ்ரேல் ராணுவத்தினர், 800 தன்னார்வலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மீட்டு, ஜோர்டானுக்கு அழைத்து சென்றனர்.

ஏற்கனவே அதிகளவில் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளதால், இவர்கள் அனைவரையும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடாவில் விரைவில் குடியமர்த்த உள்ளதாக ஜோர்டான் அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை