கால் சென்டர்கள் மூலம் மிரட்டி அமெரிக்கர்களிடம் மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு தண்டனை

தினகரன்  தினகரன்
கால் சென்டர்கள் மூலம் மிரட்டி அமெரிக்கர்களிடம் மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு தண்டனை

நியூயார்க்: இந்திய கால் சென்டர்கள் மூலம் அமெரிக்கர்களை ஏமாற்றி, மிரட்டி கோடிக்கணக்கான ரூபாயை வசூலித்து மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு 4 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள முதியவர்கள், சட்ட ரீதியாக குடியேறியவர்கள் உட்பட பலரின் தனிப்பட்ட தகவல்களை டேட்டா புரோக்கர்கள் மற்றும் இதர வழிகளில் இந்தியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் பெற்றுள்ளது. அவர்களை இந்தியாவின் அகமதாபாத், புனே, மற்றும் மும்பையில் உள்ள  கால் சென்டர்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் போல பேசி மிரட்டி, நீங்கள் அமெரிக்க அரசுக்கு இவ்வளவு வரி செலுத்த வேண்டியுள்ளது. கட்டத் தவறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை கிடைக்கும் என மிரட்டுவர். சட்ட ரீதியாக குடியேறியவர்களிடம் குடியுரிமை அதிகாரிகள் பேசுவது போல் பேசி மிரட்டுவர். இதற்கு பயந்து, அவர்கள் கேட்கும் பணத்தை செலுத்த முன்வருபவர்களிடம், அவற்றை ‘ஸ்டோர் வேல்யூ கார்டு’ மற்றும் எலக்ட்ரானிக் முறையில் செலுத்தும் விதத்தையும் அவர்களே கூறுவர். இதுபற்றிய தகவலையும், கால் சென்டர் ஊழியர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய கும்பலுக்கு உடனடியாக தெரிவித்துவிடும். அவர்கள் அந்த பணத்தை திரட்டும் நடவடிக்கையில் இறங்கிவிடுவர். சிலரிடம் நிதித்திட்டங்கள் பற்றி பொய் தகவல்களை கூறி பணம் பறிந்துள்ளனர். இப்படியாக கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அமெரிக்கர்களை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக அமெரிக்காவில் ஏற்கனவே 3 இந்தியர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் 21 இந்தியர்களுக்கு 4 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை அமெரிக்க நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் கூறுகையில், ‘‘அமெரிக்க மூத்த குடிமக்களை ஏமாற்றியவர்களை தண்டனை வாங்கி கொடுக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தள்ளது. டெலி மோசடி திட்டங்களை ஒழிக்க அமெரிக்காவின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது’’ என்றார்.

மூலக்கதை