அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு இந்தியா - அமெரிக்கா செப்.6ல் பேச்சுவார்த்தை : டெல்லியில் நடத்த முடிவு

தினகரன்  தினகரன்
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு இந்தியா  அமெரிக்கா செப்.6ல் பேச்சுவார்த்தை : டெல்லியில் நடத்த முடிவு

வாஷிங்டன் : பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியா -  அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 6ம் தேதி இந்தியாவில் நடைபெறும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய், ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா நல்லுறவு பேணி வருகிறது. ஈரானிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவரும் நிலையில், இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்த இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இருநாட்டு பாதுகாப்பு உறவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு, இந்த பேச்சுவார்த்தையை நடத்த பல முறை திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 6ம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் இது மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தை, அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக மைக் பாம்பியோ நியமிக்கப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் ஆகியோர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து இந்த பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நியூவர்ட் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசுபிக் பகுதியில் சந்திக்கும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை