வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா கவலைக்கிடம்

தாகா: வங்கதேச நாட்டின் பெண் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் கலிதா ஜியா (72). இவர் தனது ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரில்  இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு  எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  தற்போது, சிறையில் அவர் படுத்த படுக்கையாக உடல்நிலை மோசமடைந்து விட்டதாக முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சியின் பொதுச்  செயலாளர் மிர்ஸா பக்ருல் இஸ்லாம் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறையில் ஜியாவின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. அவரது உறவினர்கள் சந்திக்க சென்றபோது, கலிதா ஜியா  தானாக எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு  செய்ய வேண்டும்’’ என்றார். கடந்த மாதம் கலிதா ஜியாவின் வயது மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன்  வழங்கியது. ஆனாலும், அவர் மீதுள்ள மற்ற 5 வழக்குகளில் இன்னும் ஜாமீன் கிடைக்காததால், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை