ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்வு

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியில் நீடிப்பார்.

ரஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாதிமிர் புதின் (வயது 65), தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்க களம் இறங்கினார்.

அதற்கு முன்பு அவர் 2 முறை பிரதமராக இருந்தார். பிரதமர் பதவியில் இரண்டு முறைக்கு மேல் இருக்கக்கூடாது என்பதற்காக அதிபா் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிபருக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். தற்போதைய தேர்தலில் அவருக்கு எதிராக பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இந்த தேர்தலுக்காக ரஷியாவில் 96 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் ஆர்வமாக, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்ததனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.

இதில், சுமார் 76 சதவீத வாக்குகள் பெற்று புதின் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக ரஷ்யாவில் அதிகாரத்தில் இருந்து வரும் புதினின் ஆதிக்கம் இன்னும் நீடிக்க உள்ளது.

முதற்கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் புதின் பேசினார். அப்போது கடந்த சில ஆண்டுகளில் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.   மக்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தேர்தல் முடிவுகள் மூலம் நான் காண்கிறேன்” என்றார்.

புதினுக்கு அடுத்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பவல் குருதினின் 12 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.    ரஷ்ய அதிபராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். ஆனால், முறைகேடு செய்து புதின் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

புதினுக்கு போட்டியாளராக கருதப்பட்ட எதிர்கட்சி தலைவர் கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது புதினுக்கு சாதகமாக அமைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை