சிரியாவில் யுத்தம் தீவிரம்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிரியாவில் யுத்தம் தீவிரம்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

டமாஸ்கஸ்: சிரியாவில் இரு நகரங்களில் யுத்தம் தீவிரமடைந்திருப்பதை தொடர்ந்து அங்கு வசித்து வந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேறினர்.
சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டு போர் தொடர்ந்து 8-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அதிபர் படைகளுக்கு ஆதரவாக ரஷிய படைகளும் களம் இறங்கி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. இந்தப் போரினால் இதுவரை 61 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளனர்.

56 லட்சம் பேர் நாட்டை விட்டே சென்றுவிட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர்.

4 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியை மீட்பதற்காக கடந்த மாதம் அதிபர் ஆதரவு படைகள் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதல்களில் ஏதுமறியாத குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.



சண்டை நிறுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனால் உயிர் பிழைப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர்.

அங்கு இருந்து மட்டும் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். சிரியாவில் தாக்குதல்கள் நடந்து வருகிற இன்னொரு முக்கிய நகரம், துருக்கி எல்லையில் அமைந்து உள்ள ஆப்ரின் நகரம் ஆகும். அங்கு பதுங்கி உள்ள குர்து இன போராளிகள் மீது துருக்கி படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

குர்து இன போராளிகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்துகிறோம் என துருக்கி கூறினாலும், இந்த தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் துருக்கிப்படைகள் தரைவழி தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ஆப்ரின் நகரில் இருந்து 30 ஆயிரம் மக்கள் வெளியேறி உள்ளனர்.

அவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்து உள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

சிரிய அதிபர் ஆதரவு படைகள் வசமுள்ள கிராமங்களுக்குத்தான் அவர்கள் சென்று உள்ளனர்.

.

மூலக்கதை