பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

லண்டன்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அண்டவியல், குவாண்டம் தியரி, கருந்துளை ஆராய்ச்சி ஆகியவற்றில் ஸ்டீபன் ஹாக்கிங் பங்கு மிகவும் முக்கியமானது.

பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

அவரது மறைவு தங்களை பெருந்துயருக்கு ஆழ்த்தியுள்ளதாக அவரது பிள்ளைகள் லூஸி, ராபர்ட், டிம் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.

“எங்கள் அன்புத் தந்தை எங்களைவிட்டு பிரிந்தார். அவரது மறைவு எங்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி, அசாதாரண மனிதர்.

அவரது பணிகளும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மதிநுட்பமும் ஹாஸ்ய உணர்வும் உலகில் பலரை கட்டிவைத்திருக்கிறது.

இந்த அண்டம் நீங்கள் விரும்பும் மனிதர்களின் வசிப்பிடமாக இல்லாவிட்டால் அர்த்தமற்றதாக இருந்திருக்கும்” என்று ஒரு முறை அவர் கூறியதை நாங்கள் இப்போது நினைவுகூர்கிறோம். அவரது இழப்பு எங்களை என்றென்றும் வாட்டும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

21-வயதில் மிகக்கொடிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அப்போது மருத்துவர்கள், ஸ்டீபன் 2 அல்லது 3 வருடங்கள் மட்டுமே வாழ்வார் என்றனர். முதலில் நோயால் மன அழுத்தத்துக்கு உள்ளான ஹாக்கிங் பின்னர் அதை உடைத்தெரிந்தார்.

முனைவர் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கனித பேராசிரியர் ஆனார்.

வாய்ஸ் சின்த்தசைஸர் எனப்படும் பேச்சு உருவாக்கி மூலம் அவர் உலகம் முழுவதும் ஆற்றிய உரைகள் லட்சோபலட்ச மக்களை அவர்பால் ஈர்த்தது.

எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.

.

மூலக்கதை