அமெரிக்கா - தென் கொரியா போர் பயிற்சி

தினமலர்  தினமலர்
அமெரிக்கா  தென் கொரியா போர் பயிற்சி

சியோல்: அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியை துவங்கியுள்ளதற்கு, வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும் விதமாக அமெரிக்கா செயல்படுகிறது' என, மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கும், கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், பல ஆண்டுகளாக பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய, வட கொரியா மீது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதித்தது.
இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது, ஏவுகணை தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்தது;. அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 'வட கொரியாவுடனான பிரச்னையில் ராணுவ தீர்வு காண்பதற்கு, ஆயுதங்களை தயார் செய்து விட்டோம்; அவர்கள் திருந்தாவிட்டால், தாக்குதல் நடத்தப்படும்' என, எச்சரித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆண்டுதோறும் நடத்துகிற கூட்டு ராணுவ போர் பயிற்சி, தென் கொரியாவில் நேற்று துவங்கியது.
வரும், 31 வரை நடக்கவுள்ள இந்த போர் பயிற்சியில், வட கொரியாவை எதிர்கொள்வதற்கு, கம்ப்யூட்டர் வழியிலான தொழில்நுட்பங்கள் குறித்து, இருநாட்டு வீரர்களுக்கும் பயிற்சி தரப்படவுள்ளது.
'இந்த கூட்டு ராணுவப் பயிற்சி, தற்காப்புக்கானது' என, தென் கொரியா கூறியுள்ளது; ஆனால், தங்கள் மீது படையெடுக்க இருநாடுகளும் ஒத்திகை பார்ப்பதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. 'தென் கொரியா - அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல். இந்த நடவடிக்கை, அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது' என, வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

மூலக்கதை