ராக்கெட் வரைபடம் : 5 வயது சிறுவனுக்கு கடிதம் அனுப்பிய நாசா

தினமலர்  தினமலர்
ராக்கெட் வரைபடம் : 5 வயது சிறுவனுக்கு கடிதம் அனுப்பிய நாசா

லண்டன் : தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்போர்ட்ஷயர் பகுதியை சேர்ந்த இட்ரிஸ் ஹைல்டன் என்ற 5 வயது சிறுவன் ராக்கெட் ஒன்றை வரைந்து, இதை போல் ராக்கெட் வடிவமைத்து விண்வெளிக்கு அனுப்புமாறும், தனக்கு விண்வெளி வீரர் உரிமம் கோரியும் நாசாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கடந்த ஏப்ரல் மாதம் இட்ரிஸ்- ன் தந்தை ஜமால் அமெரிக்காவில் உள்ள நாசாவின் தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நாசாவிற்கு சென்றடைந்த நிலையில் தற்போது சிறுவனின் கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

சிறுவனின் ராக்கெட் வடிவமைப்புக்காக நன்றி தெரிவித்துள்ள நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் பொறியாளர் கெவின் டிரூயின், இந்த ராக்கெட் வடிவமைப்பு சிறந்த விண்வெளி வீரர் ஆவதற்கான தொடக்கம் என கடிதம் எழுதி இட்ரிஸ்-க்கு அனுப்பியுள்ளார். உங்களைப் போன்ற ஆர்வம் உள்ள குழந்தைகளை வரவேற்கிறோம். 110 சதவீதம் உங்களுக்கு நாசாவில் இடம் உண்டு என கடிதத்தில் பதிவிட்டுள்ளார். நாசா அனுப்பிய கடிதத்தின் புகைப்படத்தை இட்ரிஸ்-ன் தந்தை ஜமால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக கிரகங்களை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவனுக்கு நாசாவின் கிரக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் எல். கிரீன் ரால், ஜக் டேவிஸின் உயர்வான எண்ணத்தையும், ஆர்வத்தையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை