ஸ்பெயினில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் பலி

தினகரன்  தினகரன்

பார்சிலோனா : ஸ்பெயின் நகரான பார்சிலோனாவில் தீவிரவாதிகள் வேனை மக்கள் கூட்டத்தில் செலுத்தி தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக  பலியாகினர். இதனிடையே மற்றொரு தீவிரவாதத் தாக்குதலை போலீசார் முறியடித்து நான்கு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். பார்சிலோனாவில் பரபரப்பான மக்கள் நடமாட்டம் மிக்க லாஸ் ராம்பலாஸ் சந்தையில், அதிவேகத்தில் பாய்ந்து வந்த வேன், பொதுமக்கள் மீது மோதி  தாறுமாறாக ஓடியதில் பலர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.இதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த மது விடுதிக்குள் பதுங்கிய 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆனால் வேனை ஓட்டி வந்த நபர் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து, பார்சிலோனாவில் 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இத்தாக்குதலில் இந்தியர் யாருக்கும் பாதிப்பில்லை என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.இதனிடையே பார்சிலோனாவில் இருந்து சுமார் 70 மைல் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தீவிரவாதத் தாக்குதல் முயற்சியை போலீசார் முறியடித்ததாக தெரிவித்துள்ளனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை