'மாஜி' நிதியமைச்சர் தேடப்படும் குற்றவாளி

தினமலர்  தினமலர்
மாஜி நிதியமைச்சர் தேடப்படும் குற்றவாளி

இஸ்லாமாபாத்: 'பனாமா பேப்பர்ஸ்' அம்பலப் படுத்திய ஊழல் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள, பாகிஸ்தான் முன்னாள் நிதி அமைச்சர், இஷாக் தர்ரை, 67, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள, பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்யும் மோசடி தொடர்பாக, 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில், மெகா ஊழல், அம்பலப்படுத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நிதி அமைச்சராக இருந்த, இஷாக் தர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. தகுதி இழப்பு செய்யப்பட்டதால், பிரதமர் பதவியில் இருந்து, ஷெரீப் விலகினார். இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர், இஷாக் தர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை, பாகிஸ்தான் பொறுப்புடமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால், இஷார் தர்ரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில், இஷாக் தர், சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

மூலக்கதை