ஆசியான் மாநாடு தொடங்கியது அமெரிக்க அதிபருடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசியான் மாநாடு தொடங்கியது அமெரிக்க அதிபருடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

மணிலா: ஆசியான் நாடுகளின் 50வது ஆண்டு சிறப்பு விழா, 15வது இந்தியாஆசியான் மற்றும் 12வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மோடி இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

ஆசியான் மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் ஆன பிறகு மோடி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறை ஆகும். மணிலா சென்றடைந்த மோடிக்கு அங்குள்ள விமான நிலையத்தில் பிலிப்பைன்ஸ் அரசு மற்றும் இந்திய சமூகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் வருகை தந்துள்ளனர்.

உலகநாடுகளின் தலைவர்களுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே சிறப்பு விருந்து அளித்தார்.

இந்த நிலையில், ஆசியன் மாநாடு  துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் போது உலக தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். மணிலா நகரில் 3 நாட்கள் தங்கியிருக்கும் மோடி இன்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டேவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.   இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், முதலீடு, ராணுவம் உள்ளிட்ட துறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.

இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

இன்று நடைபெறும் ஆசியான் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், ரஷிய பிரதமர் திமிட்ரி மெட்வடவே ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே ஜனாதிபதி டிரம்பை, பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமான முறையில் சந்தித்து பேசுகிறார். இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

அண்மையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை டிரம்ப் சந்தித்தார்.

இந்த நிலையில் டிரம்பும், இந்திய பிரதமரும் ஆசியான் மாநாட்டில் சந்தித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

.

மூலக்கதை