ஜாலியன் வாலாபாக் படுகொலை இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் : இந்திய வம்சாவளி எம்பி அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜாலியன் வாலாபாக் படுகொலை இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் : இந்திய வம்சாவளி எம்பி அதிரடி

லண்டன் : ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் சம்பவத்திற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு இந்திய எம்பி வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பல்வேறு தியாகிகளும் தங்களது இன்னுயிரை ஈந்து நாட்டிற்கு சுதந்திரம் தேடி தந்தனர்.

இந்த சூழலில் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்த போது கடந்த 1919ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் அமைந்துள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பொது மக்கள் அமைதியாக கூடி போராட்டம் நடத்த முயன்றனர்.   அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அங்கு கூடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு துயரம் படிந்த நாளாக அது பதிவானது.

இந்த சூழலில் இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த இந்திய எம்பி வீரேந்திர சர்மா என்பவர் இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த மசோதாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பாவி மக்களை கொன்று குவித்ததை ஏற்க முடியாது.

இதற்கு இங்கிலாந்து அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த நாளை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு 5 எம்பிக்களின் ஆதரவும் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்தியா வந்திருந்த போது ஜாலியன் வாலாபாக் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், ஜாலியன் வாலாபாக் இங்கிலாந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என்று வேதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை