மீண்டும் தீவிர அரசியலில் ஒபாமா- 2 மாகாணங்களுக்கான ஆளுநர் தேர்தலில் பிரச்சாரம்

தினகரன்  தினகரன்

விர்ஜினியா: அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 2 மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் வெற்றி பெற, முன்னாள் அதிபர் ஒபாமா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நியூஜெர்சி மற்றும் விர்ஜினியா மாகாணங்களின் ஆளுநரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதன் மூலம் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பது ஒபாமாவின் திட்டமாக உள்ளது. இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விர்ஜினியா மாகாணம் ரிச்மார்ட்டில் ஜனநாயக கட்சியினரிடையே பேசிய ஒபாமா, மீண்டும் ஜனநாயக கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த தேர்தலின் போது நமக்குள் ஏற்பட்ட பிரிவினை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக மக்களிடையே எழுந்த கோபமே தோற்றதற்கு காரணம். மக்களை ஒன்றிணைத்து சேவையாற்ற ஒருவரை இப்போது களமிறக்கியுள்ளோம். எனவே நம்மால் தற்போது வெற்றி பெற முடியும் என்றார். தமது பதவி காலத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை பெருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மக்களின் உடல்நலன் காக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவற்றை ஒபாமா பட்டியலிட்டார். கடந்த ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ஒபாமா, தற்போது அதற்கு பிறகு முதல் முறையாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஜனநாயக கட்சியினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

மூலக்கதை