நவாஸ் ஷெரீப், குடும்பத்தினர் மீது ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

தினகரன்  தினகரன்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த ஜூலை 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதையடுத்து, நவாஸ் ஷெரீப், அவருடைய 2 மகன்கள், மகள் மர்யம் நவாஸ், மருமகனும், ஓய்வு பெற்ற கேப்டனுமான முகமது சப்தார் ஆகியோர் லண்டனில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய புலனாய்வுத் துறை (என்ஏபி) 3 வழக்குகள் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நவாஸ் குடும்பத்தினர் மீது கடந்த 13ம் தேதியே நீதிபதி முகமது பாசிர் குற்றச்சாட்டு பதிவு செய்வதாக இருந்தது. ஆனால், நவாசின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜராவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.  நேற்றைய விசாரணையின் போதும், குற்றச்சாட்டு பதிவு நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என சப்தாரின் வக்கீல் அம்ஜத் பர்வேஸ் மனு செய்திருந்தார். என்ஏபி பல ஊழல் வழக்குகளை பதிவு செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் ஒரு மனு செய்திருந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை, இந்த குற்றச்சாட்டு பதிவு நடவடிக்கை ஒத்திவைக்க வேண்டும் என நவாஸ் ஷெரீப்பின் வக்கீல் ஆயிஹா ஹமீத் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. மூன்று ஊழல் வழக்குகளையும் ஒன்றாக இணைக்குமாறு நவாஸ் ஷெரீப் சார்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் மீதான முடிவை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மூலக்கதை