செல்பி 'பிரிட்ஜ்'

தினமலர்  தினமலர்
செல்பி பிரிட்ஜ்

இன்று அலைபேசி வைத்திருக்கும் பலரும் பயன்படுத்தும் சொல் 'செல்பி'. இதன் மூலம் தன்னைத் தானே விரும்பிய வகையில், வடிவங்களில் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு குழந்தைகள்,
இளைஞர்கள் என வயது வித்தியாசமில்லை. இந்த வரிசையில் செல்பி 'பிரிட்ஜ்' (குளிர்சாதனபெட்டி) தொழில்நுட்பமும் சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் இவ்வகை பிரிட்ஜ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் நகரம் - கிராமம் வித்தியாசமின்றி பெரும்பாலான வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி (பிரிட்ஜ்) உள்ளது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், குளிர்சாதனங்கள், பால், தயிர் மற்றும் சில உணவுப் பொருட்கள் ஆகியவற்றை இதில் வைத்து பயன்படுத்துவதன் மூலம் அவை கெடாமல் பிரஷ்ஷாக இருக்கிறது.

பயன்கள்: இந்த செல்பி பிரிட்ஜால் ஏற்கனவே இருக்கின்ற பொருளை மீண்டும் வாங்கி வந்து அவஸ்தைபடுவது தவிர்க்கப்படுகிறது. அந்த பொருட்களுக்கான செலவும் குறைக்கப்படுகிறது. நாம் பொருட்கள் வாங்கும் கடையில் ஏதாவது ஒரு பொருளுக்கு தள்ளுபடி இருந்தால், அப்பொருள் ஏற்கனவே இருக்கிறதா என சோதித்து விட்டு, அதனை அதிகமாக
வாங்கிக்கொள்ளவும் உதவுகிறது.

செயல்படும் விதம் : நாம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சாமான்கள் வாங்க கடைக்குச் சென்றால், என்ன பொருட்கள் தேவை என்பதை ஏற்கனவே பார்த்து, பேப்பரில் குறிப்பெடுத்துக்கொண்டு கடையில் சென்று அதைப்பார்த்து வாங்குவோம். ஆனால் புதிதாக
அறிமுகமாகியுள்ள இந்த செல்பி பிரிட்ஜால் நாம் எந்த குறிப்பையும் கடைகளுக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை. அதே போல எந்த பொருட்களையும் மறந்து விட்டோம் என கவலைப்பட தேவையுமில்லை. எப்படியெனில் இந்த நவீன பிரிட்ஜில் என்ன பொருட்கள் இருக்கு? இல்லை என்பதை, அதுவே செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை நமது அலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அதனை பார்த்து, அதற்கேற்றவாறு தேவையான பொருட்களை
வாங்கலாம். இதற்காக அந்த பிரிட்ஜிக்குள் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் நாம் பிரிட்ஜ் கதவை திறந்து பின் மூடும் போது, அது செல்பி எடுத்து அலைபேசிக்கு அனுப்பி விடுகிறது. அமெரிக்காவில் இவ்வகை பிரிட்ஜ் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

மூலக்கதை