பாகிஸ்தான் இனி ‛டெரரிஸ்தான்'; ஐ.நா., கூட்டத்தில் இந்தியா பதிலடி

தினமலர்  தினமலர்
பாகிஸ்தான் இனி ‛டெரரிஸ்தான்; ஐ.நா., கூட்டத்தில் இந்தியா பதிலடி

ஜெனிவா: பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை ‛டெரரிஸ்தான்' என அழைக்கலாம் என ஐ.நா.,மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா கூறியுள்ளது.
ஐ.நா., கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி, காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை இந்தியா தூண்டி வருவதாகவும் புகார் கூறினார்.

உற்பத்தி:

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய தூதர் ஈனம் காம்பீர் பேசியதாவது: ஒசாமாவை பாதுகாப்பும், முல்லா ஒமருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. குறுகிய கால வரலாற்றில், புவியியல் அமைப்பில் பயங்கரவாதத்துடன் பாகிஸ்தான் பெயர் பெற்றுள்ளது. பாகிஸ்தான் ‛டெரரிஸ்தானாக' மாறியுள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது.

ஏற்க முடியாது:

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். எந்தளவு எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பயன்படுத்தினாலும், இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர். பாதுகாக்கப்படுகின்றனர். ஆனால், இந்தியாவில் மனித உரிமைகள் பற்றி அந்நாடு பேசுகிறது. உள்நாட்டில் தோல்வியடைந்த நாட்டிடமிருந்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த பாடம், உலகத்திற்கு தேவையில்லை. உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை கைவிட பாகிஸ்தானுக்கு இன்னும் அறிவுரைகள் தேவைப்படுகிறது. தற்போது, பயங்கரவாதத்திற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்து வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தவிர பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை