ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

நியூயார்க் : ஐநா கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் சுஷ்மா அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். நியூயார்க்கில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐ. நா. பொதுச் சபைக் கூட்டம் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.

இந்நிலையில் தற்போது 72வது ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் விமான நிலையம் வந்தடைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை முன்னிட்டு சுஷ்மா சுவராஜ் அமெரிக்காவில் 7 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
 ஐ. நா. வில் உறுப்பினராக உள்ள நாடுகளில் 120 நாடுகள் வரை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐநாவின் இந்திய பிரதிநிதி சையது அக்பரூதீன் கூறுகையில், இந்த மாநாட்டில் ஐ. நா. அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.



மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் இந்த பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ்  சந்தித்து பேசுகிறார். இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டம் ஒன்றிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.

ஐநா மற்றும் சர்வதேச நாடுகளின் கூட்டத்தில் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடுகளை சுஷ்மா எடுத்துரைக்க உள்ளார்.

.

மூலக்கதை