அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

தினமலர்  தினமலர்
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த அமெரிக்க வீரர் என்ற சாதனையை விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரிபவர் பெக்கி விட்சன். இவர் ஏற்கனவே விண்வெளிக்கு சென்ற உலகின் வயதான வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். இவரின்
தற்போதைய வயது 57.

இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் 'சர்வதேச விண்வெளி மையம்' அமைத்து வருகின்றனர். அங்கு இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெக்கி விட்சனும் ஒருவர்.நேற்றுடன் இவர்
விண்வெளியில் 534 நாட்களை கடந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா சார்பில்
அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த விஞ்ஞானி ஜெப் வில்லியம்சின் (534 நாட்கள் 2 மணி 48 நிமிடம்) சாதனையை முறியடித்துள்ளார்.

முதல் பயணம்


இவர் முதன்முதலாக 2002 ஜூன் 7ல் 'எக்ஸ்பெடிசன் 5' என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் மேற்கொண்டார். ஆறு மாதம் விண்வெளியில் தங்கி ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் 2007 அக்., 10ல் இரண்டாவது முறையாக 'எக்ஸ்பெடிசன் 16' விண்கலம் மூலம் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 2008 ஏப்., 19ல் பூமிக்கு திரும்பினார்.
மூன்றாவது முறையாக கடந்த 2016 நவ., 19ல் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் செய்தார். இன்னும் 5 மாத காலத்துக்கு அவர் அங்கு பணியாற்றுவார்.

பெருமைகள்


சர்வதேச விண்வெளி மையத்தில் 2 முறை விஞ்ஞானிகள் குழுவுக்கு கமாண்டர் ஆக பதவி வகித்த முதல் பெண்; மேலும் நாசா விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே ஒரு பெண் என்ற என்ற பெருமையும் பெற்றுள்ளார். விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். பயோகெமிஸ்ட்ரி பட்டதாரியான இவர், 1989ல் நாசா விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்.

மூலக்கதை