வங்கத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினமலர்  தினமலர்

தாகா: வங்கதேசத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2016 ஜூலையில் வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள ஹாலே ஆர்டிசன் ரெஸ்டாரன்ட்டில் வெளிநாட்டினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 23 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. ஐ.எஸ்., அமைப்பின் மூளையாக ஜமாத் உல் முஜாகிதீன் பங்ளாதேஷ் (ஜே.எம்.பி) என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதற்குப்பின் அங்கு பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரமானது. இந்நிலையில் நேற்று, தலைநகர் தாகாவில் இருந்து 245 கி.மீ., தொலைவில் சில்ஹெட் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை ராணுவத்தினர் உறுதி செய்தனர். இதையடுத்து 'ஆப்பரேஷன் டுவிலைட்' என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கினர். அந்த கட்டடத்தை முற்றுகையிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர். இறுதியில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஜே.எம்.பி., பயங்கரவாத அமைப்பின் தலைவர் மூசா கொல்லப்பட்டுள்ளார் என கூடுதல் ஐ.ஜி., மூனிருஜ்ஜமான் தெரிவித்துள்ளார். இதனை உறுதி செய்ய தடய அறிவியல் சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை