லண்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து : 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லண்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து : 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்

லண்டன் : இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் புகழ் பெற்ற மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் மிகப் பெரிய நகராகும். இங்கு உலகப் புகழ் பெற்ற பல்வேறு வர்த்தக பகுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றாக கேம்டன் லாக் மார்க்கெட் பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1000க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் என இந்த மார்க்கெட் இரவு பகல் என எந்த நேரமும் பிசியாக செயல்படும் பகுதியாகும். இந்த சூழலில் நேற்று நள்ளிரவு யாரும் எதிர்பாராத வகையில் மார்க்கெட் பகுதியில் உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் திடீரென தீ பிடித்தது.

பயங்கரமான காற்று காரணமாக தீ வேகமாக அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. உடடினயாக தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் 10 வாகனங்களில் சுமார் 70 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கேம்டன் லாக் மார்க்கெட் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அப்பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலைக்குள் அனைத்து தீயும் முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதால் மிகப் பெரிய அளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் மேற்கு லண்டனில் கிரென்பெல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் அடுத்தடுத்து நடந்து தீ விபத்து சம்பவங்கள் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை