முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடிடிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?

வாஷிங்டன் : பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் இன்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சு வார்த்தையின் போது எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுவது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல்,  அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று  முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ  காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

இதில் இரு  நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட  துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர்,  அங்கிருந்து நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்தார்.   பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி அமெரிக்கா செல்லும் நான்காவது பயணமாகும்.   தலைநகர் வாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி எம். பி. , கமலா ஹாரிசும் மோடியை வரவேற்பு தெரிவித்திருந்தார்.

பயணத்தின் முதல் நாளான  நேற்று, ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்,  வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள்  நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா  உள்ளிட்ட அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை  மாநாட்டில் மோடி பங்கேற்றார்.    ‘மேக் இன்  இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். கூட்டம் முடிந்த பின் கூகுள்  சுந்தர் பிச்சை நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவுக்கு வெளிநாட்டு மூலதனங்களை ஈர்க்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.

இதைத்தொடர்ந்து, விர்ஜினியாவில், அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் இன்று மோடி  உரையாற்றினார்.    அப்போது எச்1பி விசா குறித்து அதிபர் டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் மோடியிடம் வலியுறுத்தினர்.

மேலும் அவர் பேசுகையில், இந்தியா இளைஞர்கள் நிறைந்த தேசமாகும். இளைஞர்களின் கனவு மற்றும் அவர்களது எண்ணத்தை நிறைவேற்றுவதன் மூலமாகவே இந்தியா வளர்ச்சியின் இலக்கை  எட்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்பே நாம் தீவிரவாதத்தை பற்றி பேசினோம்.

ஆனால் அப்போது உலக நாடுகள் அதை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று கூறின. ஆனால் தற்போது உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தீவிரவாதிகள் அவர்களுக்கு உணர்த்தியுள்ளனர்.


சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியாவின் வலிமை உலக நாடுகளுக்கு தெரிந்து விட்டது. அது குறித்து எந்த நாடும் கேள்வி எழுப்ப முடியாது.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா போதிய பலத்துடன் செயல்பட்டு வருகிறது. உலகமே ஒரு குடும்பம் என்பது வெறும் வார்த்தையல்ல.

அது இந்தியாவின் இயல்பான ஒன்றாகும். சர்வதேச நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு ஏற்பவும், அதே நேரத்தில் இந்திய இறையாண்மையை பாதுகாப்பதிலும், அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும் கடினமான பாதையில் இந்தியா நடைபயின்று வருகிறது.

இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது என்றார்.

இதையடுத்து,  பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டெனால்ட்  டிரம்ப் சந்திப்பு வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறுகிறது. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் மோடி, டிரம்ப் இருவரும் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சு வார்த்தையின் போது சிவில் அணுசக்தி, தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு துறையில் முதலீடு, ராணுவ ஒத்துழைப்பு, எரி சக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்படும் என தெரிகிறது.

மேலும் வர்த்தகம், தொழில், முதலீடு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அமெரிக்காவின் 22 ஆள் இல்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வது தொடர்பான அதிபர் டிரம்பின் அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

பிரதமர் மோடியும், டிரம்பும் கூட்டாக நிருபர்களை சந்திக்க மாட்டார்கள் என்றபோதிலும், இருவரும் தனித் தனியாகவும் கூட்டாகவும் அறிக்கை வெளியிடுவார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் விருந்தளிக்கிறார். டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் வெளிநாட்டு தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியுடன் முதன்முறையாக விருந்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது இரு தலைவர்களும் தங்களுக்குள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்கின்றனர்.   அப்போது இந்தியா வருமாறு, அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நெதர்லாந்து செல்கிறார்.

அங்கு அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே, மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

பின்னர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.

.

மூலக்கதை