லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

லண்டன்: லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று அதிகாலை 1. 16 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 4வது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.

அலறல் சத்தம் கேட்டு மற்ற குடியிருப்பில் வசிப்பவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். தீ வேகமாக பரவிய நிலையில், பலர் பத்திரமாக வெளியே ஓடி வந்தனர்.

உயிரை காப்பாற்றிக்கொள்ள சிலர் மாடியில் இருந்து குதித்தனர்.

10வது மாடியில் வசித்த பெண் ஒருவர் தனது குழந்தையை தூக்கி வீசினார்.

அதை கீழே நின்றவர் பத்திரமாக பிடித்துக்கொண்டார். இதில், அந்த குழந்தை உயிர் தப்பியது.

இந்த தீ விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எரிந்துவரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



விபத்து நடந்த  கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என தெரிகிறது. 27 தளங்களும் முழுவதுமாக பற்றி எரிவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது. மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கட்டிடம் முழுவதும் தீ பற்றியதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முழுமையாக எரிந்துவிட்டதால் கட்டிடம் உருக்குலைந்து காணப்படுகிறது. தீ  அணைக்கப்பட்ட பின்னர்தான் குடியிருப்பில் இருந்தவர்களின் முழு விவரமும்  தெரியவரும்.

விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

.

மூலக்கதை