லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ

தமிழ் முரசு  தமிழ் முரசு
லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ

லண்டன்: லண்டனில் 27 மாடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் சதி செயலா என விசாரணை நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் மேற்கு பகுதியில் லான்கேஸ்டர் மேற்கு எஸ்டேட் பகுதியில் கென்சிங்டன் வடக்கில்  லதிமோர் சாலை என்ற இடம் உள்ளது. இங்கு கிரென்பெல் என்ற 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 120 வீடுகள் உள்ளன. லண்டன் நேரப்படி இன்று அதிகாலை 1. 16 மணி அளவில் இந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீயானது 27 மாடிக்கும் வேகமாக பரவியது. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் உறக்கத்தில் இருந்தனர்.

தீ மற்றும் புகை வருவதை கண்ட குடியிருப்புவாசிகள் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 60க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு படை வாகனங்கள் விரைந்தன. சுமார் 200க்கும் அதிகமான வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வேன்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.

120 வீடுகளிலும் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இதில் சிலர் உயிர் பிழைக்க மாடிகளில் இருந்து குதித்தனர். அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   மருத்துவமனைகளுக்கு லண்டன் ஆம்புலன்ஸ் நிர்வாகம் அளித்துள்ள தகவலின் சுமார் 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்னும் ஏராளமானோர் புகை மற்றும் கட்டிடத்தின் உள்பகுதியில் சிக்கி யிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளது.


தகவல் அறிந்து அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தீ பற்றி எரிவதை அச்சத்துடன் பார்த்தபடி இருந்தனர். ஏராளமானோர் தங்களது செல்போனில் அதை படம் பிடித்து உடனுக்குடன் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

போலீசாரும், மீட்பு படையினரும் அவர்களை எச்சரித்தபடி விரைந்து கொண்டிருந்தனர்.

தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வெப்பம் தாங்காமல் சுவர்கள் வெடித்து சிதறுவதால் அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.   தீ விபத்து காரணமாக அப்பிராந்தியம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.

பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 5 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசி டிம் டவுனி என்பவர் கூறுகையில், அந்த கட்டிடம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட்டது என்றார்.

அறிவிப்பாளர் ஒருவர் கூறுகையில், 100 மீட்டர் தள்ளியிருந்த போதிலும் நான் முழுவதும் சாம்பல் படலத்தால் மூடப்பட்டு விட்டேன் என்றார். 27 மாடி கட்டிடம் என்பதால் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் போல பற்றி எரிந்த தீ பல கிமீ தொலைவுக்கு தெரிந்ததாக லண்டன் வாசிகள் தெரிவித்தனர்.

தொடக்கத்தில் தீ பிடித்த போது மாடியில் இருந்து யாரோ டார்ச் வெளிச்சத்தை அடிப்பதாக கருதியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பின்னர் தான் அது தீ விபத்து என்பது தெரியவந்துள்ளது என்றனர்.

இதுகுறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகையில், உண்மையில் இது மிகப் பெரிய விபத்தாகும்.

இந்த கட்டிடம் 1974ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

மேலும் மீட்பு பணிகளை அருகில் இருந்து விரைவு படுத்தி வருவதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சாதிக் கான் தெரிவித்துள்ளார். இது தீவிரவாதிகளின் சதி செயலா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றதா என்பது மீட்பு பணிகளுக்கு பின்னர் விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும்.

இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை