இங்கிலாந்தில் இன்று காலை குண்டுவெடிப்பு: 19 பேர் பரிதாப பலி 50 பேர் படுகாயம்: தீவிரவாதிகள் தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்தில் இன்று காலை குண்டுவெடிப்பு: 19 பேர் பரிதாப பலி 50 பேர் படுகாயம்: தீவிரவாதிகள் தாக்குதல்

மான்செஸ்டர்: இங்கிலாந்து மான்செஸ்டரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, குண்டுவெடித்து 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று இரவு பிரபல பாப் பாடகி அரியனா கிராண்டேயின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த இசைக்கச்சேரியில் சுமார் 21 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் கூடியிருந்த இந்நிகழ்ச்சி களைகட்டியிருந்தது.

ஆட்டம், பாட்டம் என இளைஞர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 3. 05 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறின.

 

ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக இசைநிகழ்ச்சி நடைபெற்ற பகுதியின் கதவுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து அங்கிருந்தவர்கள் வெளியேறினர்.

தகவலறிந்து போலீசார், பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்சுகள் அதிகளவில் வரவழைக்கப்பட்டன.

இந்த குண்டுவெடிப்பில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இசைக்கச்சேரி அரங்கத்தில் இருந்து தொலைதூரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், பாடகி அரியனா கிராண்டேவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவம் நடந்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மான்செஸ்டர் நகரில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் யாரும் நகருக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
 தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் எந்தவொரு இயக்கமும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.



இத்தாக்குதலை பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘மான்செஸ்டரில் நடந்த தாக்குதல் வேதனையளிக்கிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என கூறியுள்ளார்.

இசை கச்சேரியில் குண்டுவெடிப்பு சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

.

மூலக்கதை