உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி உறுதியானது

தினத்தந்தி  தினத்தந்தி
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி உறுதியானது


லக்னோ,  உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த சூழலில் சமாஜ்வாடியில் உட்கட்சி பூசல் அதிகரித்தது. குறிப்பாக கட்சியின் தேசிய தலைவர் முலாயமுக்கும், அவரது மகனும் முதல்–மந்திரியுமான அகிலேசுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. அகிலேஷ் யாதவ் சொந்தமாக வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்தார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவுக்கு கட்சியின் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமி‌ஷன் உத்தரவு பிறப்பித்தது.  
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நகர்விற்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வழிவகை செய்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஏற்கனவே ஷீலா திட்சீத்தை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை தொடங்கியது. 2014 பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடைபெற்ற போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மொத்தம் 80 தொகுதிகளில் 72 தொகுதிகளை பா.ஜனதா தன்வசப்படுத்தியது. இப்போதும் அக்கட்சிக்கென தனி மெஜாரிட்டி உத்தரபிரதேசத்தில் உள்ளது. பாரதீய ஜனதா எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என உறுதியாக உள்ளது. பிரசாரத்தையும் தொடங்கியது. எனவே மாநிலத்தில் சமாஜ்வாடி, பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் என நான்கு முனைப்போட்டி ஏற்படும் என்ற நிலையிருந்தது.
உட்கட்சி பூசலுக்கு இடையே சமாஜ்வாடி கட்சியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் அகிலேஷ் யாதவ் நடவடிக்கையில் இறங்கினார். காங்கிரஸ் கட்சியுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இத்தகவலை உறுதிசெய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி, உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைப்போம்; முழு தகவலை அடுத்த இரண்டு நாட்களில் வெளியிடுவோம் என்று கூறிஉள்ளது.
முன்னதாக ஷீலா திட்சீத் பேசுகையில், முதல்-மந்திரி வேட்பாளர் போட்டியில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன், இரண்டு முதல் மந்திரி வேட்பாளர்களை நாங்கள் கொண்டிருக்க முடியாது, என்றார். 

மூலக்கதை