தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக இருவர் கைது

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக இரண்டு நபர்களை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ம் தேதியன்று முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் கண்காணிப்பில் முதல்வர் உள்ளார் என்றும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருவைத்தால், அவ்வாறு வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பிய இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் சென்னையை சேர்ந்த ராஜ்கமல் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில், ”சதீஷ்சர்மா” என்ற முகநூல் கணக்கில் இயங்கி வந்த நாமக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதேபோன்று சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்ததாக 43 வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குவதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்காகவும், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் இம்மாதிரியான தவறான தகவல்களையும், வதந்திகளையும், சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும், அதனை பிறருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றமாகும்.

மேலும் இதுபோன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை அச்செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

மூலக்கதை